Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 9


போலீஸ்காரர்களின் குண இயல்புகளை
அவன் சொன்ன போது
மனதுக்குள் சற்று தடுமாற்றம்

இவர்கள் எனக்கு உதவுகிறார்களா?
இல்லை
என்னை ஏதோ ஒன்றுக்கு
பயன்படுத்தப் பார்க்கிறார்களா?

இவன் சொல்வது பொய்யல்ல.
அவனது பேச்சை கேட்டு
சீனிவாசனின் முகம் ஏன் விகாரமடைய வேண்டும்?

ஏதோ நடக்கிறது

நடப்பது எதுவானாலும் நடக்கட்டும்
என்ற முடிவு மனதுக்குள் எழுந்தது.

தலைக்கு மேலே
வெள்ளம் போனால்
சாணென்ன முழமென்ன?

இறுதியாக எது வந்தாலும்
முகம் கொடுப்பதெனும்
முடிவுக்கு வந்தேன்

"என்ன அமைதியாகிட்டே?"
உள்ளே இருந்தவன் பேசினான்.

ஒன்றுமில்லை
தலையை ஆட்டிக் கொண்டே
சிரிப்பை வரவழைக்க முயன்றேன்.

அவன் என்னை வியப்போடு பார்த்தான்.

உன் பெயர் என்ன?

"அப்பாராவ்"

உன் பேர் சொல்லி அழைக்கலாமா?

அவன் சிரித்தான்.

எனக்கு ஒருத்தர் பேர் சொல்லி அழைச்சுதான் பழக்கம்.
அதுதான் கேட்டேன்?

"உன் விருப்பம்.
ஆனால் எல்லாருமே என்னை பாஸ் என்றுதான்
கூப்பிடுவாங்க"

இப்போது எனக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்தது.

"ஏன் சிரிக்கிறாய்?"

ஒரு சிங்கம் காட்டில இருந்தா ராஜா
அதே கூட்டில இருந்தா................?

"ரொம்ப வாய் பேசுறியே?"

இல்ல அப்பாராவ்
உன்னை பாஸ் என்று கூப்பிட சொன்னே
அதனாலதான் அப்படி சொன்னேன்.

"அது தப்பா?"

தப்பில்ல அப்பாராவ்.
நான் கூட இதைவிட பலமா இருந்துருக்கேன்.
பயமென்றால் என்னென்றே தெரியாது.
சின்ன வயசில இருந்தே சாவுக்கு பயப்படாதவன்.
வாழணுமுண்ணு நினைச்ச பிறகுதான்
பிரச்சனைகள் துரத்துது
என்று சொல்லி விட்டு ஒரு பெரு மூச்சை உதிர்த்தேன்.

"அப்போ?"

அது ஒரு காலத்தோடு முடிஞ்சுது என்று நினைச்சேன்
திரும்ப அதை தொடங்கிடுவேனோ தெரியாது

"நீயும் என்னை மாதிரியா?"

சே.........சே...........
என்று பேச முற்படும் போது
சில போலீஸ்காரர்கள் கீழே இறங்கி வரும்
சத்தம் கேட்டதும் என் பேச்சை நிறுத்திக் கொண்டேன்.

அவர்கள் என்னைப் பார்த்து
ஏதோ கன்னடத்தில் பேசிக் கொண்டார்கள்.

அவர்களைப் பார்த்ததும்
அப்பாராவ் பேசாமல் இருந்தான்.

அவர்கள் அப்பாராவின் செல்லைத் திறந்து
அவனை வெளியே வரச் சொன்னார்கள்.

அவன் வெளியே வந்ததும்
அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டார்கள்.

அவன் எதையோ சொன்னான்.

அப்பாராவின் கழுத்தை பிடித்து
அவர்கள் தள்ளிக் கொண்டு போனார்கள்.

நான் செய்வதறியாது நின்றேன்.

பக்கத்தில் இருந்த போலீஸ்காரனிடம்
எங்கே அப்பாராவை தள்ளிக் கொண்டு போகிறார்கள்
என்று கேட்டேன்

"அவனை லாடங்கட்டப் போறாங்க" என்றான்.

அப்படி என்றால் என்ன என்று கேட்க நினைத்த போது
அப்பாராவின் ஓலம் என் காதுகளுக்கு கேட்டது.

அவனை அழைத்துப் போய் அவனை அடிக்கிறார்கள்
என்பதை மட்டுமே உணர முடிந்தது

எனக்குள் மிருகம் ஒன்று புகத் தொடங்குவது புரிந்தது.

இலங்கை காடுகளில் ஆயுதங்களோடு திரிந்து
இனி சாவுதான்
இனி சாவுதான் என்று
போய்
போய் திரும்பி வந்த
அந்த நிமிடங்கள் மீண்டும்
எனக்குள் உருக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதை
உணர்ந்தேன்.

இனி அஞ்சக் கூடாது.
எது வந்தாலும் முகம் கொடுக்க வேண்டும்.

என்றோ ஒரு நாள் சாவு வரும்
அது இன்று வந்தாலென்ன
நாளை வந்தாலேன்ன

அடுத்த பலிக்கடா
நானாக இருக்கலாம்
சரி
அது நடக்கட்டும்
என்னைத் அடிக்கும்
என்னை இந் நிலைக்கு தள்ளும் எவனுக்கும்
என்னால்தான் சாவாக வேண்டும்

அதை எனக்குள் உறுதியாக்கிக் கொண்டேன்.

அப்பாராவின்
ஓலம் நின்று சற்று நேரத்துக்கு பின்
மீண்டும் யாரோ வரும் சத்தம்................

அப்பாராவ்
நடக்க முடியாமல் நடந்து வந்தான்
இல்லை
அந்த இருவரும் தள்ளிக் கொண்டு வந்தார்கள்

நானும் வருவதை எதிர் கொள்ளத் தயாரானேன்.

நான் ரெடி....................

No comments: