Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 5


கதவை சாத்தி விட்டு சீனிவாசன் போகும் போது
வெளியே நின்ற போலீஸ்காரர்களிடம் ஏதோ சொல்ல
அவர்கள் சிரித்த சிரிப்பு
எனக்குள் என்னென்னவோ செய்தது

அது சிறை அல்ல
ஆனால் அந்த அறைக்குள்ளிருந்து
வெளியே நடப்பவற்றை பார்க்க முடியாது
மூடிய ஜன்னல்களைத் திறந்தால் கூட
அடுத்து இருப்பது ஒரு சுவர்

வெளியே
இடையிடையே போகும் வாகன சத்தங்கள்
அது இரவு என்பதை உணர்த்தியது
ஒரு சில போலீஸ் பூட்ஸ் சப்த்தங்கள்
தூரத்தேயிருந்து கேட்கத் தொடங்கும்

அது எவரோ என்னை நோக்கி வருகிறார்கள்
என்று மனதுக்குள் அச்சத்தைக் கொண்டு வரும்
நானிருக்கும் அறையை நெருங்கி ஓசை வரும் போது
என்னை நோக்கி வருவதாக மனம் படபடக்கும்

அந்த நபர்
அறைக்கு வெளியே உள்ள ஒருவரோடு
பேசிவிட்டு நகரும் ஒலி கேட்கும் போதுதான்
மனது ஆறுதலடையும்

மீண்டும் யாரோ வரும் ஓசை
அதே பதட்டம்.................

இது தொடர்ந்து கொண்டேயிருந்தது

சில வேளைகளில்
அப்படிக் தொடர்ந்து கேட்கும் ஒலிகளுக்குள்
நடந்து போகும் யாருக்கோ
ஒருவர் எழுந்து மரியாதை செய்வதற்காக
சல்யூட் அடிக்கும் சத்தம் கேட்கும்

அந்த சல்யூட் சத்தம்
ஒரு அதிகாரி நானிருக்கும்
அறையைக் கடந்து செல்கிறார் என்பதை
என்க்குள் உணர்த்தும்

அடுத்த பூட்ஸ் ஒலிகள் எல்லாம்
சாதாரண போலீஸ்காரர்கள் நடக்கும் சத்தமாக இருக்கலாம்

என் அறைக்கு வெளியே
என்னை கவனிக்க யாரோ ஒருவர் இருக்கிறார்

வெகு நேரத்தில் என்னால் உணர முடிந்தது அதைத்தான்

இடையே
ஒரு ஜீப் வந்து நிற்பதும்
யாரோ குரல் எழுப்புவதும் கேட்டது
அது எவரோ அடிக்கும் வலி தாங்காமல் கத்தும் சத்தம்

லத்தி ஒன்றால்
அடித்து அடித்து ஒருவரை
இழுத்துக் கொண்டு வருகிறார்கள் போலும்

தூரத்தே கேட்ட சத்தம்
என் அறையைத் தாண்டி சென்ற போது
அந்த மனிதனின் முனங்கல்
அந்தக் குளிரிலும் என்னை வியர்க்க வைத்தது

நாலைந்து பேர்
அந்த மனிதனை தாக்குவது போல
கேட்டது

அவன் எதையோ சொல்ல
அவர்கள் அவனை அடிக்கிறார்கள்
அவன் அமைதியாகிறான்
மீண்டும் அடிக்கிறார்கள்
அவன் மீண்டும் எதையோ சொல்ல முயல்கிறான்
மீண்டும் அடிக்கிறார்கள்
மீண்டும் அமைதியாகிறான்

நடப்பது தெரியவில்லை
ஆனால்
அவனிடம் எதையோ கேட்கிறார்கள்
அவன் சொல்ல தொடங்க அடிக்கிறார்கள்
அவர்கள் எதையோ கேட்க
ஒன்று இல்லை என்று சொல்கிறான்
அல்லது வாதாடுகிறான்
மீண்டும் அடிவிழும் போது
வாய் மூடி முனங்குகிறான்

மொழி புரியாத போது
இதைத்தான் என்னால் ஊகிக்க முடிகிறது

நிமிடத்துக்கு நிமிடம்
நான் உணரும் சத்தங்கள்
அச்சத்தையும்
வெறுப்பையும்
கோபத்தையும்
எனக்குள் வளர்க்கிறது

முதல் முறையாக
இப்படி வதைபடும் போது
"பழி வாங்கு" என்று
என்னுள் தூங்கிக் கிடந்த மிருகம்
விழித்துக் கொண்டு
என்னை எதற்கோ தயார் செய்கிறது

வாய் பேசாத
மிருகங்களே
தனது முடிவு எட்டுவதை உணரும் போது
எதிர்த்து நிற்கும் போது
நான் மட்டும் ஏன்
அமுங்கிப் போக வேண்டும்

அங்கே யாரோ ஒருவனுக்கு நடக்கும்
அதே சடங்கு
நாளை எனக்கும் நடக்கலாம்

நடப்பது நடக்கட்டும்
உள்ளே எத்தனை நாள் வைத்திருப்பார்கள்?

எப்படியும்
ஒருநாள் வெளியே வருவேன்
வந்ததும்
என்னை இப்படி ஆக்கியவர்களை
அழிக்காமல் இருக்க மாட்டேன்

அன்றைக்கு தெரியும் என்னை யாரென்று.............?

நான் அப்படி என்ன செய்தேன்?

அவர்கள் என்னோடு பேசியிருக்கலாம்

இல்லை
நீ என்னோடு பேசியிருக்கலாம்

சென்னையில் இருந்த என்னை
பெங்களூருக்கு அழைத்து வந்ததே நீதானே?

அங்கே எனக்கு மொழி தெரியும்
நண்பர்களைத் தெரியும்
என் பிரச்சனை தெரியும்

இங்கே உன்னைத் தவிர
யாரையும் எனக்கு சரியாகத் தெரியாது
தெரிந்தவர்கள் எல்லாம்
நெருக்கமாய் எனக்காக
எதையும் செய்யக் கூடியவர்கள் இல்லை
அத்தனையும் உனக்குத் தெரியும்

யாரோ
ஏதோ செய்கிறார்கள் என்றால்
நீயுமா?

பிரச்சனைகள் சூறாவளியாக
வந்த போதெல்லாம்
எனக்காக
என்னோடு இருந்தவள் நீ

எனக்கு
வாழ்வென்பது நிச்சயமில்லை
எப்போதும் எதுவும் நடக்கும் என்ற போது

"இல்லை ஜீவா
நான் எப்பவும் உங்களுக்காக இருப்பேன்
நான் யுத்த பகுதிகளில் வாழ்ந்தவள்.
இந்தியா பாகிஸ்தானோடு போர் புரிந்த போது
விழும் குண்டுகளுக்குள் அச்சமின்றி
ஓடி விளையாடிவள் நான்.
என்னை நம்புங்கள்
உங்களை நான் பார்ப்பேன்."
என்று தைரியம் கொடுத்தவள் நீ

இதெல்லாம் சரிப்படாது என்று
முரண்பட்ட அத்தனை சமயங்களிலும்
தேடித் தேடி வந்தவள் நீ

விரக்தியோடு
அதிரும் அத்தனை வேளைகளிலும்
என்னை
அழுத்தி அழுத்தி அரவணைத்தவள் நீ

சாப்பிட மறுத்து
நிற்கும் போது
சாப்பிடுங்க ஜீவா
உடம்பில பெலம் இல்லேண்ணா
ஓடக் கூடமுடியாது என்று
ஊட்டி விட்டவள் நீ

மரண பயம்
ஒவ்வொரு நிமிடமும்
என்னை குலுக்கி எடுத்த போது
அணைத்துக் கொண்டவள் நீ

செலவு செய்ய
ஒன்றுமே கையில் இல்லை என்று
எனக்குள் உடைந்து வீழ்ந்த போது
அதை சொல்லாமல் உணர்ந்து
நான் சொல்லாமலே
என் வாழ்கை செலவுகளை
எந்த எதிர்பார்ப்புமின்றி
கையிலெடுத்துக் கொண்டு செய்தவள் நீ

சென்னையில்
எப்பவும் நண்பர்களோடு திரியிறீங்க
எதாவது ஆகிட்டா என்னால தாங்க முடியாது ஜீவா
என்னோட பெங்களூர் போயிடலாம்
என்று அழைத்து வந்தவள் நீ

இப்போ மட்டும்
ஏன் ரேக்காம்மா
இப்படி பண்ணினே?

நான் என் பெத்தவங்களை பார்த்ததில்லை
என் அம்மா உன்னை மாதிரிதான் இருப்பாளோ
என்று நினைக்க வைத்தது நீ

என் இதயம் விம்மி வெடித்தது.

ரேக்காம்மா
ஏன் இப்படி பண்ணினே?

செத்துப் போடா என்று சொல்லியிருந்தா
சத்தியமா செத்திருப்பேன் ரேக்காம்மா!

நீ
யார் சொல்லையும் கேட்கக் கூடிவள் இல்லை

நீ கொடுக்காம
என் பாஸ்போட் எல்லாம்
போலீஸ் கைக்கு வர சான்ஸே கிடையாது?

அடுத்து
என் கடந்த கால வாழ்வு பற்றி
உன்னைத் தவிர யாருக்கும் தெரியாது
அது எப்படி போலீஸுக்கு தெரிஞ்சது
இதில உனக்கும் பங்கு இருக்கு

வேதனையும்
விரக்தியும்
மாறி மாறி என்னை தாக்கத் தொடங்கியது

இப்போ
முதலில நான் வெளிய வரணும்

வந்து
என்னை இப்படி ஆக்கினவங்களை
இல்லாமல் பண்ணனும்

ஒண்ணு
அத்தனை பேரோட நான் சாகணும்
இல்ல
எல்லாத்தையும் முடிச்சுட்டு
நான் எங்காவது தப்பணும்

இறுகிய மனதோடு
அறையில் கிடந்த பென்ஜில்
தூங்கும் போது
உருவாகிய வலி கூட தெரியவில்லை

வெளியே கேட்ட சத்தங்கள்
எனக்கு கேட்கவில்லை
மனம் வேறெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது
அந்த
அசதியோடு
அயர்ந்து போனேன்...

No comments: