Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 7



மாகா போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இபபோது
என்னுள் சற்று ஆறுதல்.

என்னைத் தெரிந்த ஒருவருக்காவது
நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியும்...................

நான் கீறீன்லண்டுஸுக்கு வந்த போது
மாகா
பக்கத்து அறையில் இருப்பதை கண்டேன்.

ரேகா
என்னை கொண்டு வந்து
அறையில் விட்டுப் போகும் போது
எதிரே வந்தவன்
என்னைப் பார்த்து தமிழா என்றான்
ஆம்
என்று தலையாட்டி சிரித்து விட்டு உருவான நட்புதான் அது.

மற்றுமொரு அறையில்
கிருஸ்ணன் என்று ஒரு மலையாளி வேற இருந்தான்.
அவன் கூட
மாகாவோடுதான் இருப்பான்.

சில நாட்களில் நெருக்கம்
நட்பாகி விட்டது.

நான் அறையில் தனியாக இருந்தால்
நாங்கள் சேர்ந்தே இருப்போம்.
எங்காவது போவோம்.

ரேகா
தினசரி மாலையில் என்னைத் தேடி வருவாள்.
அப்போது மட்டும்
அவளோடு பேசிக் கொண்டிருப்பேன்.
அல்லது
அவள் எங்காவது என்னை அழைத்துச் செல்வாள்.

முக்கியமாக
என்னை ஏதாவது ஒரு
நல்ல ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று
சாப்பாடு வாங்கித் தருவாள்.

மொழி தெரியாமல்
ஹொட்டல்களுக்குப் போய்
நான் ஒன்றை நினைத்து கேட்க
அவர்கள் எதையோ கொண்டு வந்து வைக்க
பல வேளைகளில் அரை பட்டினிதான்

எனவே
ஒரு நேரமாவது
நல்ல சாப்பாடு சாப்பிட வைப்பாள்.

அவள் சென்னையை விட்டு
பெங்களூருக்கு மாற்றலான பின்னர்
5-6 மணிக்குள் வேலையை முடித்துக் கொண்டு
நேராக என்னிடம்தான் வருவாள்.

இரவு 9-10 மணி வரை
என்னோடு இருப்பாள்.

அந்த சில மணி நேரம்தான்
நான் மகிழ்வாக கழிக்கும் நேரம்.........
மொழி புரியாத ஒரு இடத்தில்
நான் மாட்டிக் கொண்டது
இது இரண்டாவது முறை

கிறீன்லான்டில் பணிபுரிபவர்கள்
தமிழ் பேசுவதால் ஓரளவு நிம்மதி.
சாப்பாடு எல்லாம் ரொம்ப மோசம்
அதனால் வெளியே எங்காவது சாப்பிட்டால்தான் உயிர் வரும்

கிறீன்லான்டில்
இட்லி : தோசை
இதைத் தவிர எல்லாமே
மகா மட்டமாக இருக்கும்
டீ கூட தண்ணி சூடா
ஏதோ நிறமா தெரியும்

அதிலிருந்து மீள
ரேகா இல்லாத போது
இந்த நண்பர்கள் தயவு இருந்தது.

பின்னர்
ரேகாவும் இவர்களுக்கு அறிமுகமானாள்.

சில வேளைகளில்
அது இனியதாக இருக்கும்
பல வேளைகளில் அதுவே
பெரும் துன்பமாக அமைந்துவிடும்.

ஏதாவது தனியா பேசணும்
என்று நினைத்துக் கொண்டிருந்தால்
அன்று இவர்களும் சேர்ந்து விடுவதால்
எங்கள் பாடு ரொம்ப திண்டாட்டம்.

இதனாலேயே
என்னை ரேகா
மகாத்மா காந்தி ரோட்டிலிருந்த
அவள் ஆபிஸுக்கே வந்துவிடச் சொல்லுவாள்.

நானும்
அங்கே போயிடுவேன்.
அங்கிருந்து எங்காவது என்னை அழைச்சுப் போவாள்.

எங்க போனாலும் ஆட்டோதான்.
ஒரு இடத்தில இருக்கிறதை விட
ஆட்டோவுல பயணம் செய்யிற நேரம்தான் அதிகம்.

இதனாலயே
நான் வெளியே போயிடுவேன்.

இவர்களோடு
ரொம்ப நெருக்கமான நட்பா இல்லாது போனாலும்
மாகாவும் கிருஸ்னணும் நல்ல நண்பர்கள் மாதிரி

நாலு நாளைக்கு முன்னதான்
கிருஸ்ணன் கேரளா போனான்.
அவன் இவனை விட ரொம்ப விவரமானவன்.

அவன்
பேசியே எதையும் சாதிக்கக் கூடியவன்.
அவனோடு பழகிய போதுதான்
மலையாளிகளின் திறன் தெரிந்தது.

எதுவுமே
தெரியாது அல்லது முடியாது என்ற வார்த்தையை
அவன் வாயிலிருந்து கேட்டதே இல்லை.
ரொம்ப பொஸடிவ்வாவே இருப்பான்.

மாகா அப்படியில்லை.
தன் காதலி பிரச்சனையை தீர்க்க முடியாம
ரேகாகிட்டேயும் என்கிட்டேயும்
சொல்லி நொந்து கொண்டேயிருப்பான்.

ஆனாலும் யாருக்கும் கெடுதல் நினைக்காத மனசு.

நேரம் காலம் தெரியாம
எங்க அறைக்கு வந்தா
இருண்ணும் சொல்ல முடியாது
போண்ணும் சொல்ல முடியாது

நான் அவஸ்தைபடுவேன்.

ஏண்ணா
ரேகா என் கிட்ட வர்ற
அதே நேரந்தான் இவனும்
அவன் ஆபீஸ் விட்டு வருவான்.
வரும் போதே என் அறையைத்தான் தட்டுவான்.
ரேகாவும் அப்பதான் வந்து டீக்கு ஆடர் கொடுத்திட்டு
உட்காருவாள்.

டீக்கு சொல்லலாமா?
என்றவாறு கதவை தட்டுவான்.

அப்புறமென்ன
உட்கார்ந்தா
அவன் எழும்பவே மாட்டான்.

ரேகா
கடிகாரத்தையும் என்னையும் பார்ப்பா.

அது கூட புரியாம அவன் இருப்பான்.
இல்ல அவன் ஆபீஸில அவன் செய்த பராக்கிரமங்களை
சொல்லிக்கிட்டு இருப்பான்.

ஒண்ணும் சொல்ல முடியாம நான் அவளை மெதுவா பார்ப்பேன்.

தினமும் நடக்கிற கூத்து இது.

வீட்டுக்கு போகப்போகும்
அவளை விட்டு வர கீழ
இறங்கி வரும் போது
" மத்தவங்களைப் பத்தி கொஞ்சம் கூட
யோசிக்காத இவர் கூட எந்த பொண்ணு
பிரச்சனை இல்லாம இருப்பா"
என்ற வார்த்தைகள் ரேகாவிடமிருந்து
மென்மையாக வந்தாலும்
அதில் கோபம் இருக்கும்.

அவள் கடுமையாக பேச மாட்டாள்.
அமைதியாக இருப்பாள்.
அதுதான் ரொம்ப கடுப்பா இருக்கிறதின் அறிகுறி.

அவளை ஆறுதல்படுத்த நான் சொல்வது
"நாளைக்கு உன் ஆபீஸ் கிட்ட வந்திடுறேன்" என்பதுதான்.

போலீஸ் ஸ்டேசனில்
என்னிடம் ஏதோ சொல்லிட்டுப் போறான்.
இப்ப போய்
என்ன சொதப்ப போறனோ என்றும்
மனதில் தோன்றியது.

இருந்தாலும்
என்னை தேடி இருக்கானே?
அது பெரிய விசயம்.
அது உண்மையில் ஆறுதல்

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே
என்னை நோக்கி வந்த சீனிவாசன்
"என்ன செஞ்சீங்க.........." என்றார் சற்று கோபமாக

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

உங்களை பார்க்க வந்த ஆள்
ஒரு வக்கீலை பார்த்திருக்கார்.
அவர் போண் பண்ணி கதிர் சாரோட பேசியிருக்கார்.
கதிர் சார் இப்போ செம கடுப்புல இருக்கார்

ஏன்?

உங்களை கேஸ் ஏதும் போடாம வெளியில விடுறதுக்கு
நினைச்சிக்கிட்டு இருந்தார்.
இப்ப பாருங்க.............
என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?
யார் அந்த ஆளு?
அந்த ஆளு வந்தா
அவனையும் உள்ள போடணுமுண்ணு கோபத்தில இருக்கார்
என்றார் சீனிவாசன்.

இருந்த பலமும் இல்லாமல் போச்சு எனக்கு....

No comments: