Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 12


அப்பாராவும்
அந்த போலீஸ்காரனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே
நான் உறங்கியிருந்தேன்.
என் மனக் களைப்பை விட
புரியாத ஒரு மொழியை தொடர்ந்து
கேட்டுக் கொண்டிருந்ததனால்
ஏற்பட்ட களைப்பு
என்னை தூங்க வைத்திருந்தது

விடியுமுன் சற்று அதிர்ந்து எழுந்த போது
நான் அப்பாராவின் மெத்தையில் தூங்கியிருந்தேன்.

அப்பாராவ்
வெறும் நிலத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

வெளியே இருந்த
போலீஸ்காரன் மட்டும்
தூங்காமல் இருப்பதற்காக
புகை பிடித்துக் கொண்டே
எதையோ படித்துக் கொண்டிருந்தான்.

நான் மறுபுறம் திரும்பி யோசிக்கத் தொடங்கினேன்.

தெரியாத ஒருவனுக்குள் உண்டாகும்
அன்பு கூட தெரிந்து பழகியவர்களுக்கு வர மாட்டேன் என்கிறதே?

நல்லவங்களா
உயர்ந்தவங்களா நினைக்கிறோம்
அப்படி நினைச்சு
நம் தனிப்பட்ட விபரங்களை
பகிர்ந்து கொள்கிறோம்

சற்று ஏதாவது ஆகும் போது
அந்த பலகீனத்தை கையிலெடுத்து
எப்படி எல்லாம்
படாத பாடாய் படுத்துகிறார்கள்?

தூரத்தே இருக்கும் போது இருக்கும் மரியாதை
மிக நெருக்மானதும் இல்லாமல் போய் விடுகிறது

நம்மிடம் ஆலோசனை கேட்டு வந்தவங்க
நமக்கே ஆலோசனை சொல்லத் தொடங்கிறாங்க
அதோட நின்னுட்டா பரவாயில்ல
தமது கருத்துகளை திணிக்க வேற முற்படுறாங்க

சரியா இருந்தா
ஏத்துக்கிறதில தப்பே இல்ல
தப்பா இருக்கிறதெல்லாம்
எப்படி சரியாகும்?

ரேகா வீட்டில
பிரச்சனையின் ஆரம்பமே
என் நண்பன் ஒருவனால்தான் ?

அதைக் கூட
நான்தான் விலை கொடுத்து வாங்கினேன்.

அவனை நான் நண்பன் என்றாலும்
அவன் என் கராத்தே சங்கத்தில்
அறிமுகமான ஒரு மாணவன்

நான்
அவனை முதன் முதலாக சந்தித்தது
இன்னுமொரு டோஜோவில்
மாணவர்களை கிரேட் பண்ணுவதற்காக
சென்ற போது....

ஒரு ஆசிரியர் பயிற்றுவிக்கும்
கராத்தே பயிற்சி நிலையத்தில் (DOJO)
அவரது மாணவர்களுக்கு
அதே பயிற்றுனர் (கிரேடிங்) தரம் பிரிக்கமுடியாது.
அதற்காக இன்னொரு பயிற்றுனரை
தலைமையகம் அனுப்பும்

இப்படி போன போதுதான் ராஜாவை சந்தித்தேன்.

ஏகப்பட்ட சிங்கள மாணவர்களுக்கிடையே
ராஜா தமிழனாக இருந்தான்.

1975-80 களில் எல்லாம்
தமிழர்கள் கராத்தே வகுப்புகளுக்கு வருவது குறைவு.

தமிழர்களது முதல் தேர்வு
கல்விதான்.

ஒரு டாக்டராகவோ இன்ஜினியராகவோ வக்கீலாகவோ
தம் குழந்தைகள்
வர வேண்டுமெனும் ஆதங்கம் மட்டுமே
தமிழ் பெற்றோரிடம் அன்று இருந்தது.

விளையாட்டு என்றால் கூட
முதன்மை
கிரிகெட்டாகத்தான் இருக்கும்.

அதற்கு அடுத்துதான் மற்ற எந்த விளையாட்டும்?

1983
இனக் கலவரத்துக்குப் பின்னர்
தமிழரிடையே ஏற்பட்ட மாற்றம்
யாரும் எதிர்பாராதது.

கெடுதல் ஒன்றினால்
ஏற்பட்ட பாரிய மாற்றம்.

அதுவரை ஒரே நேர் கோட்டில் பயணித்த மக்கள் மனதில்
எதுவும் எம்மால் முடியும் என்று
மாறி சிந்திக்கத் தொடங்கிய தருணம்?

யாராவது அடித்தால்
திருப்பியே அடிக்காமல்
வாங்கிக் கொண்டு
நாய் நம்மள கடிச்சா
நாம திருப்பிக் கடிக்கிறதாண்ணு
சொல்லி அன்று சென்ற இனம்?
இன்னைக்கு?

அப்படி இருந்த ஒரு சமுதாயத்தில்
தமிழ் பேசும் ஒருவனை பார்த்தால் மகிழ்வாய் இருக்கும்.
அது தமிழனாக இருக்கட்டும்
இல்லை
அது ஒரு இஸ்லாமியனாக இருக்கட்டும்
பழகிப் போனவர்களை விட
இவர்களை ஊக்குவிக்க தோன்றும்.

அப்படி முதன்மையாக நினைப்பது
ஒரு ஆசிரியனுக்கு தவறாக இருந்தாலும்
100 வேற்று மாணவர்கள் இருக்கும் போது
தமிழ் பேசும் ஒருவனாவது இல்லையே என்ற
ஏக்கத்தின் நடுவே
இப்படி ஒருத்தரை கண்டால்
இப்படி ஒரு எண்ணம்
நம்மை அறியாமலே மனதுக்குள் உருவாகி விடும்.

வெளிநாடொன்றில்
நம்மைப் போன்ற ஒருவனைக் கண்டால்
ஓடோடிச் சென்று தமிழரா? என்று கேட்க மனம் துடிக்கும்!
இல்ல பங்களாதேஸ் என்றால் கூட
உருது பேச தெரியாமல்
ஹாய் என்று தொடங்கி
ஜேர்மன் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் பேசும் போது
ஒரே ஊரில இருந்து வந்திருக்கான்
ஆனா இரண்டு பேருமே ஜேர்மன்ல ஆங்கிலத்தில பேசுறாங்க என்று
வெளி நாட்டுக்காரன் மனதுக்குள் நகைக்கிறான்.

ஒரு சிலர் வெளிப்படையாகவே சொல்லியும் விடுகிறார்கள்.

முதல் வெளிநாடு என்று சிங்கப்பூர் போன போது
ஜப்பான்காரனுக்கும் சீனனக்கும் உள்ள
வித்தியாசம் தெரியாம முழிச்சேன்.
இங்கே பல மொழி பேசுறவனை கூட
சுவிஸ்காரங்கள் என்றுதான் நினைச்சேன்
அதை விளக்க
அவனுக்கு கிளாஸ் எடுக்கணும்?
அதுவரை அவன் நிக்க மாட்டான்.

இங்க சிலரோடு ஆங்கிலத்தில பேசினா
நீ இருக்கிறது சுவிஸில
ஜெர்மன்ல பேசு என்கிறாங்க.

நம்ம ஜனங்களோ
ஆங்கிலம் தெரிஞ்சாதான் உலகமே மதிக்கும் என்கிறாங்க.

நம்மள்ள ரொம்ப பேர்
இன்னும் கிணத்து தவளை மாதிரி இருக்காங்க.
வெளிய வந்தாதான்
நாம முதல் என்கிறதுக்கு பதிலா
நாம எத்தனையாவது இடத்தில இருக்கிறோம்
என்று தெரியும்?

காந்தி கூட
இந்தியாவிலேயே இருந்திருந்தா
அவருக்கு தேச பக்தியே வந்தே இருக்காது என்று நினைக்க வைக்கிற
கோபம் மனதுக்குள் எழும்.

கோபம் வந்தாலும்
அடங்கிதான் ஆகணும்.
சில நாடுகள்ல பேசினா
வெள்ளை வான் வரும்
ஆட்டோ வரும்
உயிர் கூட மிஞ்சாது
இங்கே உயிராவது மிஞ்சும்?

நாம எதிர்பாராத மாதிரி மனசு மகிழுற
சில நிகழ்வுகள்
நடக்கத்தான் செய்யும்!

பளிங்குச் சிலை போல
ஆயிரம் வெள்ளை இனத்து பொண்ணுகள்
வலம் வந்தாலும்
யாரோ ஒரு பொண்ணு
பஞ்சாபியோடு நடந்து போனால்
பேரழகியாக இல்லாது போனாலும்
ஆயிரத்தையும் விட்டுட்டு
அவளை ஒரு முறை பார்க்கத் தோணும்?
நம்ம ஊரு அழகே தனின்னு
வெளிநாட்டில இருந்து கூட
எண்ணத் தோன்றும்!

இது போலத்தான் ஒரு சில
தமிழ் பேசும் மாணவர்களில் ஒருவனாக
சிங்கள மாணவர்கள் மத்தியில் இருந்து
ராஜா அறிமுகமானான்.

அன்று
கிரேடிங் தொடங்குவதற்கு
1 மணி நேரம் முன்பாகவே
டோஜோவுக்கு நான் போன போது
டோஜோ பூட்டியே இருந்தது.

நேரத்தோடு சென்று காத்திருப்பது
இறுதி நேரத்தில் செல்வதை விட
சற்று ரிலாக்ஸானது.
அடுத்தது
எனக்கு தெரியாத ஒரு இடமானால்
முன்னரே போவது பழக்கமாயிருந்தது.

அடுத்தது
மாணவர்களுக்கு முன்னமே சென்று
சற்று உடலை வோம்-அப் ஆக்கிக் கொண்டு
தயாராக இருக்க வேண்டும் என்பவை
எனக்குள் கடைப்பிடிக்கப்பட்டவை.
[img]http://blogs.newsobserver.com/media/bruce_lee.jpg[/img]
நான் போன போது
டோஜோ பூட்டி இருந்ததால்
அது திறக்கும் வரை நான் பக்கத்து மதிலில் ஏறி
ஒரு வழிப் போக்கன் போல் அமர்ந்திருந்தேன்.

என்னைக் கடந்து போகும்
கராத்தே மாணவர்கள் கூட
என்னை பார்த்து விட்டு போனார்ர்களே தவிர
எவரும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

சிலரது பேச்சுகள் இளமைத் துள்ளலாகவே இருந்தது.

"ஓரு சரக்குக்காக (பிகருக்காக) காத்து ஒண்ணு காயுதுடா
ஒரு மாவாசி (கிக்) காட்டிட்டு வரட்டுமாடா?"
ஒரு சில மாணவர்கள்
என்னை பார்த்து
பேசி விட்டு போவதை பார்த்தப்போ
உள்ளுக்குள் சிரிப்பாய் இருந்தது.

வாச்மேன் வந்து கதவை திறப்பதை
தூரத்தே இருந்து அவதானித்தேன்.

சிலர் ஊதியை சிகரட்டுகளை ஸ்டைலாக
லாவகமாக வீசி எறிந்து விட்டு
உள்ளே செல்வதும்
சிலர் சூக்களோடு உள்ளே போவதும் தெரிந்தது.

எல்லோரும் உள்ளே போகும் வரை
காத்திருந்தேன்.

எல்லோரும் உள்ளே போனதும்
எழுந்து டோஜோவை நோக்கி
நடந்து சென்று வாயிலை அடைந்ததும்
தோளில் தொங்கிய பையை
கீழே வைத்து விட்டு
குனிந்து சூவை கழட்டும் போது
அனைவரது கண்களும்
என்னை நோக்குவதை உணர்வால் அவதானித்தேன்.

சூவை கதவோரத்திலலேயே விட்டு விட்டு
உள்ளே போய்
"ஆயுபோவன்" (சிங்களத்தில் வணக்கம்) என்று
சொல்லிவிட்டு உள் புகுந்தேன்.

இலங்கையிலுள்ள YMBA ,YMCA போன்ற இடங்களில் உள்ள
டோஜோக்கள் ஒரே விதமான அமைப்புடன்தான் இருக்கும்.

அவை உண்மையில் கராத்தே டோஜோக்கள் அல்ல
மேடையோடு கூடிய ஹால்களைத்தான்
டோஜோவாக பாவிப்போம்.

அங்கே இருக்கும் உடை மாற்றும் அறைக்குள் போய்
உடை மாற்றிக் கொண்டு வந்த போது
பலரது விழிகள் தாழ்ந்து போயிருந்தன.

என்னை ஒரு வழிப் போக்கனாக நினைத்து
அவர்கள் செய்த குறும்புகளே அதற்கு காரணம்.
நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

இன்னைக்கு இப்படி இருந்தாலும்
அன்னைக்கு நாம என்ன திறமா என்ன?
ஒரு பார்வை விட்டு விட்டு

கையை தட்டி
எல்லோரும் முன்னால வந்து உட்காருங்க என்றேன்.

வந்து அமர்ந்ததும்
என்னை அறிமுகம் செய்து வைத்தேன்.
உங்க பேர்களை சொல்லுங்க............

அவர்கள்
தங்கள் பெயர்களை சொல்லிக் கொண்டு போனார்கள்.

"நீங்க உங்க சூகளை உள்ளதான் வைப்பீங்களா?"

எல்லோருமே ஆமா என்றார்கள்.

அப்போ தவறு இவர்களுடையதில்லை
இருக்கும் ஆசிரியரது என்பது புரிந்தது.

குறித்துக் கொண்டேன்.
அது குறித்து அவருக்கு சொல்லியாக வேண்டும்.

சாதாரணமாக கிறிஸ்தவ கோயில்களுக்கு போகும் போது
சூ போட்டு போகலாம்.
ஆனா ஒரு பெளத்த விகாரைக்கோ
சைவ கோயிலுக்கோ
பள்ளி வாசலுக்கோ போகும் போது
யாரும் சூ போடுறதில்லை.
அதை நாம பின்பற்றுறோம்.
அது போல கராத்தே டோஜாவுக்குள்ளும் நடைமுறையா இருக்கு.
அது ஏன் என்று தர்க்கம் பண்ண நேரமில்லை.

நான் நினைக்கிறேன்
கராத்தேயின் ஆரம்ப கர்த்தாவான போதிதர்மா ஒரு பெளத்தர்.
அந்த நடைமுறை காலா காலமா பின்பற்றப்பட்டு வருது.
இது ஒரு டிசிப்பிளின்
நான் சாதாரணமா டோஜாக்குள்ள சூ கொண்டு வர்றதில்ல.
நீங்க நிச்சயம் நாளைக்கு ஒரு மாஸ்ட்டர் : சென்சாய் ஆகலாம்.
உங்களை வச்சுதான்
உங்க மாணவர்கள் உருவாவாங்க...........................
என்று சொல்லி விட்டு அவர்களை பார்த்தேன்.

அத்தனை பேரும் எழுந்து போய்
சூக்களை வெளியே வைத்து விட்டு வந்தார்கள்.

நன்றி சொல்லி விட்டு
உடற்பயிற்சிகளை செய்து விட்டு
வோம் அப் ஆனதும் கிரேடிங் செய்யலாம் என்றேன்.

உடற்பயிற்சிகளை அவர்களோடு சேர்ந்து
செய்யும் போதே அனைவருக்குள்ளும் இருந்த
தூரம் விலகிப் போவதை உணர்ந்தேன்.
அது எனக்கு எப்போதும் தேவை என உணர்வேன்.

கிரேடிங் குறித்து பயப்படாதீங்க
நீங்க கற்றதைத்தான் கேட்பேன்.
புதிதா வராது?
தவறிச்சுட்டுண்ணு தெரிஞ்சா
உடனே கையை உயர்த்துங்க
இன்னொரு வாய்ப்பு தருவேன்.
அடுத்தவங்களை திரும்பி பார்க்காதீங்க
என்று கூறிவிட்டு கிரேடிங்கை ஆரம்பித்து : முடித்தேன்.

அனைவரும் நல்லாவே செய்தார்கள்.
ஒவ்வொருத்தரை உருவாக்குவதுதான்
ஒவ்வொரு ஆசிரியரது கடமையாக வேண்டுமே தவிர
அடுத்தவரை வீழ்த்துவதல்ல.

ஒரு சில தவறுகளை சுட்டிக் காட்டி
இதை இப்படி செய்திருக்க வேணும்.
பயிற்சி செய்யுங்க.
யோசிக்காதீங்க
எல்லாருமே நல்லா செஞ்சீங்க என்றதும்
முகத்தில் மகிழ்வு தெரிந்தது.

அடுத்தவர் மகிழ்வை ரசிக்கும் போதும்
அவங்களோடு சோர்ந்து மகிழும்போதும்
மனதுக்குள் ஏற்படும் புத்துணர்ச்சியே
ஒரு தனி ரகம்.

எல்லாம் முடிந்து டோஜோவை விட்டு
வெளியே வந்த போது
எல்லோருமே
மாஸ்டர் டீ சாப்பிட்டு போறீங்களா? என்றதும்
அவர்களோடே கேலியா பேசிக்கிட்டு
ஒரு உணவகத்தை நோக்கி போனோம்.

இவர்களை கண்டதும்
உணவகத்திலிருந்தவர்கள் அதிகம் பேசவில்லை.
சொன்னதும் டீ கொண்டு வந்து வைத்தார்கள்.

என்ன எல்லாருமே கப்சிப்பா இருக்காங்க
என்று கேட்டதும்
ராஜாதான் வாய் திறந்தான்.

உணவகத்தில் ஒரு தகராறு நடந்த போது
இவர்கள் எல்லோருமே
தகராறு செய்தவர்களை சாத்தியிருக்கிறார்கள்.
அதை அவன் விபரித்தான்

அந்த பயத்தின் தன்மை அங்கே தெரிந்தது

கராத்தே பார்வைக்கு சண்டை போல இருந்தாலும்
இது ஒரு தியானம்
பலமானதால
அப்பாவிளை பிரச்சனை பண்ணக் கூடாது.
நமக்கு ஏதாவது வரும் போது பரவாயில்ல.
ரவுடி டைப்பாக ஆகிடக் கூடாது.
காலையில கூட எனக்கே மாவாசி கேரி (Roundhouse kick)
காட்டிட்டு வரட்டுமான்னு யாரோ சொன்னாங்க.
என்று சிரித்தேன்.

சொன்னவன் தலையை சொறிந்தான்.

பாத்தா தெரியாது
மோதினா நிலமை விவகாரமாகிடும்.
நாம
எதுவும் செய்யலாம்
ஆனா
நாலு பேராவது அது நியாயமுண்ணு சொல்லணும்.
இல்லேண்ணா ரவுடியாதான் நினைப்பாங்க என்றதும்

ராஜா ஏன்டா பெரிய தனமா சொன்னோம் என்றவாறு
இல்ல...........என்று தொடங்கி நிறுத்தினான்.

நடந்ததை மாற்ற முடியாது
இனி கவனமா நடங்க என்று சொல்லி விட்டு
வந்தேன்.

நான் போகுமிடங்களில்
இப்படியான நட்புகள் உருவாகும்.
இப்படி யாரோடும் பேசுவதால்
என்னை அவர்களும்
அவர்களை நானும் மறப்பதில்லை

ராஜா பின்னர்
நான் கற்பிக்கும் டோஜோக்களுக்கு வரத் தொடங்கினான்.

நான் இலங்கையை விட்டு
சிங்கப்பூர் செல்லும் போது
என் மாணவர்களில் திறமையான
பயிற்றுவிக்கக் கூடிய திறமையுள்ளவர்களுக்கு
வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து விட்டு சென்றேன்.

1983
இனக் கலவரத்துக்குப் பின்
ராஜா நாட்டை விட்டு வெளியேறக் கூட
பணத்தால் உதவினேன்.

அவன்
பெல்ஜியத்துக்கு வந்து இருந்தான்.
இடையிடையே
அவன் மடல் வரைந்தான்.

ஐரோப்பா குறித்த எந்த விபரமும்
நான் அறிந்திராத சமயம் அது.
அவன் சொல்வதை நம்பினேன்.

ஒரு மடலில்
தனக்காக ஒரு இந்திய பெண்ணை பார்த்து
மணமுடித்து தரும்படி கேட்டிருந்தான்.

அதை அங்கிருந்து செய்ய முடியாது.
இந்தியா வந்தால் பார்க்கலாம்
என்ற நிலையில் அதை
ரேகாவிடம் சொன்ன போது
ரேகாவின் தங்கை குறித்து
இருவரும் நினைத்தோம்.

ஆனால்
ராஜா வரட்டும்
ஒரு முறை இருவரும் பார்க்கட்டும்
அதுவரை
நாங்கள் இருவரும் மனதுக்குள் வைத்திருப்போம்
என்று முடிவெடுத்தோம்.

இருந்தாலும்
" உன் மனசுக்கு பிடிக்குதாண்ணு முதலில் பாரு ரேகா" என்றேன்.

தேவையற்று
ஏதோ ஒன்றுக்குள் மூக்கை நுழைத்ததனால்
இனிதாய் இருந்த எமக்குள்
பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது....................

No comments: