Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 14



இரவு புறப்பட்ட புகையிரதத்தில்
காலையில் பெங்களூரை
நானும் ரேகாவும் ராஜாவும் அடைந்தோம்.

சென்னையை விட மிக வித்தியாசமாக இருந்தது.
அனைத்தும் வித்தியாசம்
சென்னையின் வேகம் பெங்களூரில் இல்லை.
சற்று அமைதி தெரிந்தது.

சில்லென்று வீசிய மென் காற்று வேறு இதமாக இருந்தது.

வெளியே வந்த போது
இலங்கையிலுள்ள சிங்கள மொழி போலவே
கன்னட எழுத்துகள் சில தெரிந்தன.

கன்னட எழுத்துகள்

சிங்கள எழுத்துகள்

தோற்றத்தில் சில எழுத்துகளில் ஒற்றுமை தெரிந்தாலும்
உச்சரிப்பு வேறாக இருந்தது

புகையிரத நிலையத்தை விட்டு
வெளியே வந்ததும்
ரம்மியமாக இருக்கு பெங்களூர் என்று சொன்னேன்.

பிடித்த ஒன்றை மனசு விட்டு
பேசி பழக்கப்பட்டு விட்டதால்
என் பேச்சு ரேக்காவுக்கு எப்பவும் பிடிக்கும்.
பிடிக்காததை கூட சொல்லிவிடுவேன்.

உண்மையாகவா? என்றாள்.

ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுது
உண்மையாகவே பிடிச்சிருக்கு என்றேன்.

குளிரை சொல்றீங்களா மாஸ்டர் என்றான் ராஜா

இல்லை
அதிகாலையின் அமைதியான சில்லேன்ற ஒரு அழகு என்றேன்.

பாலுமகேந்திராவின் படங்களில்
எப்படியாவது பல சீன்களை
பெங்களூரில் எடுப்பார் என்றாள் ரேகா.

அப்படியா?
அந்த இடங்களை பார்க்கணுமே? என்றேன்.


பார்க்கலாம்
என்றவள் போகும் போது
வழியில் தெரிந்த
விதானசவுதாவையும் (பாராளுமன்றம்)
பக்கத்தில் இருந்த நூலகத்தையும் பார்த்த போது
கொழும்பு கார்கில்ஸ் கட்டிங்கள்
மனதுக்குள் அலையாக அடித்து சென்றது
கார்கில்ஸ் கட்டிடம் போல் தெரிந்த நூலகம் கொழும்பை நினைவுக்குள் மீட்டியது


அவற்றை எல்லாம் பார்த்து வியந்து நின்ற என்னை
இப்போ
2 நாள் நிக்கப் போறோம்.
நேரே வீட்டுக்கு போய்
அதன் பிறகு விடுதி ஒன்றை பார்ப்போமா?
இல்லை
விடுதி ஒன்றுக்கு போய்
அப்புறமா வீட்டுக்கு போவோமா?
என்று மெதுவாக என் காதுக்குள் முணுமுணுத்தாள் ரேகா.

முதல்ல விடுதி ஒன்றுக்கு போய்
ஒரு குளியல் போட்டுட்டு போறதுதான் நல்லது.
முதல் முறையாக வீட்டுக்கு போகப் போறோம்.
உனக்கு பிரச்சனை இல்லை
நீ பழக்கப்பட்டவள்.


அப்போ வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற
விடுதி ஒன்றை பார்ப்போம் என்று சொல்லி
ஒரு ஆட்டோவில் மூவரும் ஏறினோம்.

யாரையும் தெரியாமல் ரேகா வீட்டில்
நாங்கள் தங்குவது சரியில்லை என்று
பேசியே விடுதியில் தங்கும் யோசனையை
ரேகாவிடம் சொல்லியிருந்தேன்.

அதன்படி விடுதியை நோக்கி
ஆட்டோவை போகும்படி சொன்னாள்.

ஒரு விடுதியை வந்தடைந்ததும்
ரேகாதான் பேசி பணமும் கொடுத்தாள்.

நானும் ராஜாவும் மெளனம் காத்தோம்.
ஒன்று மொழி தெரியாமை
அடுத்தது வெளியூர்காரர் என்றால்
சுத்திடுவாங்க என்று உணர்வு.

என்னையும் ராஜாவையும்
விடுதி அறையில் விட்டு விட்டு
ரேகா வீட்டுக்கு கிளம்பினாள்.

போகும் போதே
பகல் சாப்பாட்டுக்கு
அழைத்து போக வருகிறேன் என்ற போது

என்ன சாப்பாடு கிடைக்குமோ தெரியாது
என்று கேலியாக சொன்ன போது
சிரித்து விட்டு நகர்ந்தாள்.

நாங்கள் குளித்து விட்டு
ஒரு டீ சாப்பிட்ட பின்னர்
ஒரு குட்டி தூக்கம் போட்டோம்.

ரேகா வந்து கதவை தட்டிய பின்தான்
எமது தூக்கமே கலைந்தது.

நல்லா தூங்கீட்டீங்க போல

பார்த்து பார்த்து களைச்சு............என்றதுமே
ரேகா சிரிக்கத் தொடங்கினாள்.

போகலாம் வீட்டில சாப்பாடு ரெடி என்றாள்.

நாங்கள் மீண்டும் ஒரு ஆட்டோவில்
அவள் வீடு இருந்த
விவேக் நகரை நோக்கி பயணித்தோம்...

No comments: