Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 6


கதவு திறக்கப்படும்
சத்தம் கேட்டதும்
எழுந்து கொண்டேன்
காலை நேரம் அது என்பதை உணர்த்துவது போல
சூரிய வெளிச்சம் அறையின் இருளை போக்கி
என் கண்களை கூசச் செய்தது.

முழு இரவும்
மனதை போட்டுத் தாக்கிய தாக்கம்
என் உடலின் தளர்ச்சியில் தெரிந்தது.

கதவைத் திறந்து கொண்டு
கையில் டீயோடு வந்தார் சீனிவாசன்.

தூங்க முடிஞ்சுதா?

உம்.......

இரவு வீட்டுக்கு போக இருந்தப்போதான்
உங்களை பிடிக்கப் போக சொன்னாங்க.
சும்மா
வேலையில்லாத ஒண்ணுக்காக
பெரிய ரகளையே பண்ண வச்சுட்டா அந்த பொம்புளை.
இருந்தாலும்
நீங்க ரொம்ப அதிஸ்டசாலி
என்று சொல்லிக் கொண்டே
கையிலிருந்த டீயை நீட்டினார்.

"சாப்பிடுங்க"

பல் துலக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன்.
இருந்தாலும் தாங்ஸ் என்று வாங்கி
மெதுவாக உறிஞ்சினேன்.

நான் மட்டும் வராம இருந்திருந்தா
இன்னைக்கு அரை உசிராத்தான் இருப்பீங்க.
இரவிரவா பந்தாடியிருப்பாங்க.

சீனிவாசன் சொன்ன போது
இரவில் கேட்ட அந்த மனிதனின் அலறல்
என் எண்ணத்தில் அலையாக மோதிச் சென்றது.

நான் நிலத்தை பார்த்தவாறே டீயைக் குடித்தேன்.

கதிர் சார்
மட்டும் இதில இன்வோல்வ்வா இருந்தா
நான் ஏதாவது சொல்ல முடியும்
அவருக்கு மேல இருக்கவர்கிட்ட விசயம் போயிடுச்சு
அதுதான் பிரச்சனை

மெதுவாக அவரை நோக்கினேன்.

அவர் கொடகுகாரர்.
அந்த தே........க்களும் அவங்க ஊரு.
அவர் என்ன செய்வாருண்ணு தெரியாது.
கதிர் சார் சொன்னா கேப்பார்.
இருந்தாலும்......................
என்று தலையை சொறிந்தவர்
எதுக்கும்
முகத்தை கழுவிக்கிட்டு வெளிய உட்காருங்க
என்ற படி வெளியே போனார் சீனிவாசன்.

சற்று நேரத்தில் வந்த
ஒரு போலீஸ்காரர்
என்னை வெளியே அழைத்துப் போய்
முகம் கழுவ ஒரு குழாயைக் காட்டினார்.

முகத்தைக் கழுவிக் கொண்டு
கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டே
அவர் பின்னால் நடந்தேன்

அவர் ஒரு இடத்தைக் காட்டி
இங்கே உட்காரு என்றார்.

நான் உட்கார்ந்தேன்.

இரு புறமும் போலீஸ்காரர்கள்.

நான் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்க்கும் பலர்
ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

எனக்கு எதுவுமே புரியவில்லை.

அதற்குள் என்னை நோக்கி வந்த சிலர்
என்னை புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்கள்.

நான் ஏன் என்று கேட்க
ஒரு டெரரிஸ்டடை பிடிக்கப் போக இருப்பதாக
நேற்று பேசிக் கொண்டார்கள்.
நீதானாமே அது
என்றவாறு கமராவால் கிளிக் பண்ணத் தொடங்கினார்கள்.

நான் என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக் கொண்டிருந்தேன்.

அந்நேரம் பார்த்து
அவ்விடத்துக்கு வந்த சீனிவாசனிடம்
என்னைப் பற்றியும்
என்னிடம் கைப்பற்றிய ஆயுதங்கள் குறித்தும்
கேள்விகள் கேட்க
கடுப்பாகிப் போன சீனிவாசன்

யோவ்
இந்த ஆளு சிங்கப்பூர்காரர்யா.
இந்த ஆளு கொண்டாந்த பணத்தை எல்லாம் கறந்துட்டு
ஒரு பொம்பளை
இப்படி கம்பிளைண்ட் கொடுத்து
நாடகமாடுதுய்யா
என்ற கத்த

அப்படியா
அவ யாரு சார்
அது பத்தி சொல்லு சார்
என்று மேலும் கடுப்பேத்தினார்கள்
அந்தப் பத்திரிகைக்காரர்கள்.

நான் மீண்டும் மெளனமானேன்.

சீனிவாசன்
இங்க வாங்க என்று
அவர்களை அழைத்துக் கொண்டு போன போது
என்னை அறியாமலே
ஒரு பெருமூச்சு வெளியானது

அதன்பின்
யாரையும் பார்க்க மனசில்லாமல்
நிலத்தை பார்த்தவாறு நான் உட்கார்ந்திருந்த போது
என் முன்னே ஒருவர் வந்து நிற்பது தெரிந்து
தலையை தூக்கினேன்.

கிறீன்லண்ஸில் பக்கத்து அறையில் இருந்த மாகாலிங்கம்
நின்று கொண்டிருந்தார்.

மாகாவை கண்டதும் எழுந்திருக்க முயன்ற போது

இரு ஜீவன் என்று என் தோளில் அழுத்தி
இருக்க வைத்து விட்டு
அவனும் உட்கார்ந்தான்.

என்ன ஆச்சு?

எனக்கு தெரியாது மாகா.
நேத்து ராத்திரி வந்த போலீஸ்
அறையில குண்டு வச்சிருக்கிறதா புகுந்து
இங்க கொண்டு வந்துட்டாங்க

அப்புறம்?

ரேகாவும்
அவங்க அம்மாவும்தான் இதுக்கு காரணமா தெரியுது.
ஆனா முழுசா என்ன ஏதெண்ணு ஒண்ணும் புரியல்ல.

காலையில பசங்க
சாரை ராத்திரி போலீஸ்
புடிச்சுட்டு போனாங்க என்றாங்க.
நான்
எந்த ஸ்டேசன்னு தெரியாம
எல்லா இடத்துக்கும்
போண் போட்டு தேடினேன்.
கடைசியா இங்க இருக்கேண்ணு தெரிஞ்சுது.

தாங்ஸ் மாகா என்ற போது
என் பேச்சு அதற்கு மேல் வரவில்லை.

டேய் பயப்படாதடா.
நல்ல காலம் இன்னைக்கு சனிக்கிழமையாச்சு
அதனால வேலைக்கு போகல்ல.
அது சரி
ரேகாவை பாத்தியா?

இல்லடா!

அப்போ
எப்படிடா அவ உன்னை மாட்டி விட்டாண்ணு சொல்றே?

என் பாஸ்போட்டெல்லாம் அவ கையிலதான் இருந்துச்சு.
அதெல்லாம் இப்போ போலீஸ் கையில இருக்கு என்று
நடந்த விபரங்களை சொன்னேன்.

டேய்
ரேகா வீட்டு அட்ரஸை குடு
நான் போய் எப்பிடியாவது பேசுறேன்
என்றான் மாகா.

இல்ல மாகா
நான் சாகாம மட்டும் தப்பினேன்னு சொல்லு
அவங்க எல்லாரையும் சாகடிக்காம விடமாட்டேன்.

டேய் பைத்தியகாரன் மாதிரி பேசாதடா.
அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்
எப்படியும் உன்னை வெளிய எடுக்க பார்க்கிறண்டா
என்றான் மாகா.

அவன் வார்த்தைகள் ஒரு வித பலத்தை தந்தது.

என் பிரெண்டு ஒருத்தன்
கிரிமினல் லாயர்.
அவனை சந்திச்சு பேசுறேன்.
இப்போ
ரேகா அட்ரஸை சொல்லுடா
என்ற மாகா அவள் முகவரியை வாங்கிக் கொண்டு
கையில் சிறிது பணமும் தந்து விட்டு ஸ்டேசனை விட்டு நடந்தான்...

No comments: