Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 13

ராஜா வரட்டும்
ஒரு முறை இருவரும் பார்க்கட்டும்
அதுவரை
நாங்கள் இருவரும் மனதுக்குள் வைத்திருப்போம்
என்று முடிவெடுத்தோம்.

இருந்தாலும்
" உன் மனசுக்கு பிடிக்குதாண்ணு முதலில் பாரு ரேகா" என்றேன்
நாங்கள் இருவரும்
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காத்திருந்தோம்

ராஜாவும் சென்னை வந்து இறங்கினான்.

நான் இருந்த வீட்டுக்கு அவனை அழைத்து வந்தோம்.

நான் அப்போது
சென்னையில்
எஸ்.டீ.எஸ். அவர்களுக்கு சொந்தமான பிளாட்டில்
வசித்து வந்தேன்.
அது எஸ்.டீ.எஸ்ஸுக்கு எம்.ஜீ.ஆர் கொடுத்தது
அதை எஸ்.டீ.எஸ்
அவரது அனுதாபியான ஒத்தக் கை புலவருக்கு கொடுத்திருந்தார்.

இயக்கத்தில் இருந்து நான் வெளியான போது
ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும்
என் பாதுகாப்புக்காகவும் அங்கே தங்க வைக்கப்பட்டேன்.

நான் அங்கே தங்கி இருப்பது
என் நெருங்கிய சில இந்திய நண்பர்களுக்கும்
ரேகாவுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.
புலவருக்குக் கூட எதுக்கு
தங்கியிருக்கிறேன் என்று தெரியாது.

ஏதோ எஸ்.டீ.எஸ் ஐயாவுக்கு தெரிஞ்சவர்
தங்கியிருக்கிறார் எனும் விடயத்தை விட
புலவருக்கு வேறு ஒண்ணும் தெரியாது.

ராஜா வந்த போது
நானும் ரேகாவும் மீனம்பாக்கம்
விமான நிலையத்துக்கு போய் அழைத்து வந்தோம்.

ராஜாவும் நானும்
பழக்க தோசத்தில்
அதிகமாக சிங்களத்திலேதான் பேசிக் கொண்டோம்.

நாம பேசுறது ரேகாவுக்கு புரியாது
அது வேறு விதமா யோசிக்கத் தோணும்
தமிழில் பேசு என்று பல தடவை சொன்னாலும்
சில சமயங்களில் மட்டும் ராஜா தமிழில் என்னோடு பேசினான்.

அவன் சிங்களத்தில் பேசினால்
நான் அதை தமிழில் ரேகாவிடம் சொல்வேன்.

அவள் பரவாயில்லை என்றாலும்
இல்ல
அது சரி கிடையாது
நாம மூணு பேரில ஒருவருக்கு புரியாத
ஒரு மொழியில ரெண்டு பேர் பேசிக்கிறது அநாகரீகம் என்று
ஒரு முறை ரேகாவிடம் சொல்லப் போய்

"அவர் தமிழ் பேசினாலும் சிங்களம் பேசினாலும்
எனக்கு ஒரே மாதிரிதான் இருக்கு
அவர் பேசுற தமிழ் எனக்கு எங்க புரியுது?"
என்ற போது எல்லோருமா சிரித்தோம்.

அதுக்கப்புறம்
அவன் தமிழ்ல என்னோடு பேசவேயில்லை :cheese:

நான் இலங்கையில் இருந்த போதும்
கராட்டே பயிற்சி கொடுக்கும் போதும்
சிங்களத்தில்தான் அதிகம் பேசுவேன்.
வீட்டில் மட்டுமே கொச்சைத் தமிழில் பேசுவேன்.

எனவே
அவனே என் தமிழ் பேச்சு கண்டு வியந்தான்.
அவன் மட்டுமல்ல
ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து
இலங்கைக்கு போன போது
என் திரைப்பட ஆசான் கூட
தமிழ் கூட பேசுவியாண்ணு ஒரு முறை ஆச்சரியப்பட்டார்.
அப்போ எல்லாம் அவர்கள்
என்னை
தமிழனாகவே நினைச்சதில்லை :cheese:

சிங்கப்பூரும்
தமிழ்நாடும் என்னை அப்படி மாத்திச்சு.

இப்போ
கலந்த தமிழ் பேசுறதை உணருரேன் :cheese:

ராஜா வந்து என்னோடு தங்கியிருந்த நாட்களில்
தினமும் மாலையில் ரேகா எங்களை பார்க்க வருவார்.
அல்லது
அவர் பணிபுரிந்த மவுண்ட் ரோட்டிலிருந்த
ஆபிசுக்கு போவோம்.

மெரினா கடற்கரையில்தான்
ரொம்ப நேரத்தை நாங்கள் போக்குவோம்.

இதமான காற்று
விதவிதமான மனிதர்கள்
கணவன்-மனைவி குழந்தைகள்
ஒதுங்கி பதுங்கும் காதல் ஜோடிகள்
கடலை வாங்கும்படியும்
ஒரு முழம் பூ வாங்குண்ணா என்று
வரும் சிறுவர் சிறுமிகளும்
மெரீனா கடல் அலையாக வருவார்கள்

நான் அவனுக்கு தெரியாமல்
ரேகாவிடம் கேட்டேன்.

என்ன நினைக்கிறே?

உங்களை நம்பித்தான் இறங்குறேன்.
ஒரு முறை ராஜாவை கூட்டிட்டு பெங்களூர் போய் வரலாம்.
இப்போ ஒண்ணும் சொல்லாதீங்க
ஆசா
ராஜாவை பார்க்கட்டும்
அதுக்கப்புறம் என்ன நடக்குதுண்ணு பார்ப்போம் என்றாள்.

எனக்கு
அவள் சொன்னது சரியாக பட்டது.

அப்போ அடுத்த வெள்ளிக் கிழமை
உன் ஆபீஸ் முடிஞ்சதும் புறப்படுவோம்.
ஞாயிறு இரவு திருப்பிடலாம் என்று சொன்னேன்.

ஓகே சொன்னாள்.

ஒரு வெள்ளி மாலை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து
பெங்களூரை நோக்கி ரயிலில் புறப்பட்டு
பெங்களூரை அடைந்தோம்.

No comments: