Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 3


என்னை ஏற்றிக் கொண்டு
ஜீப் நகரும் போதுதான் தெரிகிறது
பல ஜீப்புகள் அப் பகுதியை சுற்றி வழைத்திருந்தது.

அவை எம்மை பின் தொடருகின்றன.

சே..............
சென்னை போக இருந்தேன்
அடுத்த நாள் போகலாம் என்று
அன்று அங்கு தங்கியது தப்பாய் போனதே என நினைக்கிறேன்

இனி
நடப்பதற்கு முகம் கொடுக்க வேண்டும்
சில சமயம் இதுவே வாழ்வின் அஸ்தமனமாகியும் விடும்
அதுவே விதி என்றால் நடக்கட்டும்

ஜீப் சாதாரண வேகத்திலேயே நகர்கிறது
வயர்லெஸ் வழி பேசிக் கொள்கிறார்கள்
கன்னடம் சரியாக புரியாவிட்டாலும்
ஊகங்களின் அடிப்படையில் சற்று புரிகிறது

வாழும் ஒரு இடத்தில்
அந்த மொழி தெரியாமல் வாழ்வதின்
முட்டாள்தனம் எனக்குள் உறைக்கிறது
மொழி என்பது நாம் நினைத்தவுடன்
கடையில் விலை கொடுத்து வாங்கக் கூடியதல்ல
அதற்காக நாம்தான் முயல வேண்டும்
நாம் தேட வேண்டிவை அனைத்தும்
நம்மைத் தேடி வராது
நாமாகத் தேடிப் போனால் ஒழிய.............

ஆங்கிலத்தில் நாம் பேசலாம்
அது அவரவர் மொழி போல் வராது
அதை இன்னொருவர்
அவர் எண்ணத்தோடு மொழி பெயர்த்தாலோ
அல்லது
மொழி பெயர்ப்பவரது தொனி கடுமையானாலோ
நமது உணர்வுகளை விட
அவரது உணர்வுதான் வெளிப்படும்
அதையே மாற்றி சொல்லி விவாகாரமாக்கி விட்டால்
சொல்லவே வேண்டாம்
அதுவே நமக்கு விபரீதத்தை ஏற்படுத்திவிடும்

அவளை தெரிந்த நாள் முதல்
நான் எங்கு சென்றாலும்
அவளைத்தான் அழைத்துச் செல்வேன்

இந்தியாவில் பேசப்படும்
7 மொழிகளை பேசக் கூடியவள் அவள்

அவள் பேசினால்
அதை யாரும் எதிர்த்து பேச மாட்டார்கள்
பேச்சில் அத்தனை நயனங்கள் இருக்கும்
அவளும் அப்படித்தான்.....................

அவள்
கொடுகு மலைக் காற்றின் சுவாசத்தில் பிறந்தவள்
இந்தியாவின் முதலாவது ஜெனரலின் உறவுக்காரி
பிறந்த காலத்தில் வங்க தேச பிரிவுக்காய்
பாகிஸ்தானோடு இந்தியா போர் புரிந்த போது
காஷ்மீரில் குடும்பத்தோடு வாழ்ந்தவள்

நிலமை மோசமாக இருக்கிறது
குடும்பத்தை அனுப்பிவிடுங்கள் என்று
நிலமைகளை அவதானிக்கச் சென்ற
அன்னை இந்திரா காந்தி
அவள் தந்தையான
கொமான்டர் அன்னைய்யாவிடம் சொன்ன போது
பக்த்தில் நின்ற அவள் அன்னை
செத்தால் அவரோடு சாகிறோம்
வாழ்ந்தால் அவரோடு வாழ்கிறோம்
என்று பிடிவாதமாக நின்ற அவள் தாயோடு இருந்தவள்

என்னில்
கொள்ளைப் பிரியம் அனைவருக்கும்
அவர்களோடு அவள் ஊரான கர்னாடகத்தின்
அழகு ததும்பும் கொடகுக்கு போயிருக்கிறேன்

இந்தியாவில் அனுமதி இல்லாமல்
ஆயுதம் வைத்திருக்க அவர்களுக்கு அனுமதி உண்டு அங்கு

குடகு மலையை
அவளோடு சுற்றிய போது
மலையை விட அழகாக
மடுவான அவள்தான் என்னோடு நடந்தாள்

ஊரை எல்லாம்
என் கையை பிடித்து
சுற்றிக் காட்டிக் கொண்டு போன போது
ஊரை விட
அவள் குரலையும்
அவளையுமே ரசித்தேன்

"எல்லாத்துக்கும் சிரிங்க
எதையோ நினைச்சுக்கிட்டு மனசுக்குள்ள.................."

அவள் வாயில் அடிக்கடி வெளி வரும் வார்த்தைகள்

இப்பவும் அவள் அன்பை நினைத்தால்
இந்தப் பாடலைத்தான் கேட்பேன்

"குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் தன் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
-பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னம் தனியாக நிற்க்கும் தேர் போலா ஆனேன்"

இந்தப் பாடல்
அவளோடு வாழ்ந்த
இனிய நினைவுகளை என்னுள் மீட்டுச் செல்லும்

என்னவள் மூத்தவள்
டிராவல் கம்பனியில் மனேஜராக இருந்தாள்
ஒரு தம்பி கூட வீராட் கடற்படை கப்பலில் இருந்தான்

எனக்கும் அவளுக்கும்
சில தினங்களாக பிரச்சனை
இது அவளால் அல்ல
ஆனாலும் அவள் என்னை வெறுப்பவள் அல்ல
அவள் என்னை மாட்டி வைத்திருக்கமாட்டாள்?

ஆனாலும் அவள் குறித்து ஏன் பேசினார்கள்?

என் அறையில் இருந்த அவள் படத்தை பார்த்ததும்
என்னைக் கைது செய்ய வந்ததவர்களது
வேகம் குறைந்தது ஏன்?

நினைவுகளோடும்
சிந்தனைகளும்
அச்ச உணர்வுகள்
என்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தேன்

எல்லாமே
அவளாகி இருந்ததால்
அவளைத் தவிர யாரிடமும்
இதுவரை
எதுவும் எதிர்பார்த்ததில்லை
அவளே என்னை கை விட்டால்
நான் யாரிடம் போவேன்?

புரியாத மொழி
புரியாத உணர்வுகள்
கிடைக்காதென்று தெரியும் உதவிகள்
தேடாத சொந்தங்கள் கொண்ட இடத்தில்
எனக்கு எது நடந்தாலும்
வெளியே தெரியப் போவதில்லை
அது எனக்குள் உறுத்தியது

இலங்கையில்
நான் வாழ்ந்த
கிராமத்தில் ஓடி விளையாடிய காலத்தில்
ஒரு புற்று இருந்த இடத்தை காட்டி
அங்கே ஓடித் திரியாதே என்று என் அம்மா கூறுவார்

அதற்கு காரணம்
அந்த புற்றிலிருந்து ஒரு நாகம் வெளியே வரும்
அதை பலர் நாகம்மா என்று அழைத்தார்கள்
சிலர் அந்த நாகம் குடிப்பதற்காக
முட்டை மற்றும் பால் வைப்பது வழக்கம்

என் கையில் முட்டை ஒன்று கிடைத்தால்
அதைக் கொண்டு போய் அங்கே வைத்து விட்டு
நாகம்மா வந்து முட்டையை குடிக்கும் வரை
சற்று தள்ளி உட்கார்ந்து காத்திருப்பேன்

ஒரு சில தினங்கள் மட்டுமே
அந்தக் காட்சி கிடைத்திருக்கிறது
பல வேளைகளில் என் அம்மா
பின்னால் வந்து போடும் பூசை அடி கிடைத்திருக்கிறது

அந்தப் புற்றுக்கு அருகே
யாரோ ஒரு காளியம்மனின் படத்தை வைத்து விட்டுச் செல்ல
அது காளியம்மன் புற்றாகி
அதைக் காக்க யாரோ
தென்னை ஓலையால் வேயப்பட்ட குடிசை
பின்னர் குடிசைக் கோயிலாகியது
இன்று அது புகழ் வாய்ந்த சக்தி கொடுக்கும் அம்மன் ஆலமாகி இருக்கிறது
நான் பாடசாலைக்கு போகும் போதெல்லாம்
ஒரு நிமிடம் மெளனமாக வணங்கி விட்டே போவேன்

எனது மனதில் ஏதாவது பாரம் என்றால்
அந்தக் குடிசைக் கோயிலை கும்பிடுவேன்
ஆனால் ஒரு தேவாரம் கூட சொல்லத் தெரியாது
என் மனதில் இருக்கும் பாரம் குறைந்து விடும்

சோதனைகள் வரும் போதெல்லாம்
அவளைத்தான்
அந்த அம்மனைத்தான்
மனதுக்குள் நினைப்பேன்
எப்பவும்
அந்தக் குடிசையும் புற்றுமே என் கண்ணுக்குள் வந்து போகும்

அவள் மேல்
என் அனைத்து பாரங்களையும் போட்டு விட்டு
எல்லாமே உன் கையில் என்று
இரு கைகளாலும் முகத்தை தழுவிக் கொண்ட போது
என் கைகள்
விலங்கிடப் படாமல் இருந்ததை உணர்ந்தேன்

ஜீப் போலீஸ் நிலையத்தின் முன்னால் வந்து நின்றது................

No comments: