Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை.1



பெங்களூரை விட்டு வெளியேற வேண்டும் எனத் தோன்றுகிறது.

பல வருடங்கள் தொடர்ந்து பெற்ற வாய்ப்புகளை உதறித் தள்ள வேண்டும்
நண்பர்களை பிரிய வேண்டும்
எனக்கு மிகவும் பிடித்த கால நிலை.............

இப்படி எத்தனையோ...........

முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுகிறேன்.

இருப்பது ஆபத்தானது
தொடர்வது நெருடலானது
எனக்காக வாழ்ந்த காதல் கூட கருகிய நிலை

எல்லாமே பொய்

என்னை கைது செய்த
பெங்களூர் அப்பர்பெட் போலீஸ் அதிகாரி கதிரேயும் சார்ஜன்ட் சிறீனிவானும்
"கொஞ்ச நாள் ஊருக்கு போய் இருந்துட்டு திரும்பி வா"
என்கிறார்கள்.

"என்னால் எங்கும் போக முடியாது" என்கிறேன்.

"ஏன்?"

"அது அப்படித்தான்.................."

"நீ ஏதாவது தவறான முடிவு எடுத்திடாதே.
உன்னை தெரியாமல் கைது செய்திட்டோம்.
ஆனால் உனக்கு ஏதாவது நல்லது செய்யணும்.
என்ன வேணும் சொல்லு" என்கிறார் சீனிவாசன்

"எனக்கு இப்போ தனியா இருக்கணும்
யோசிக்கணும்............"

"வாங்க
லாஜ்ஜில கொண்டு போய் விடுறன்."

"வேண்டாம்"

"உங்க மேல யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.
கதிர் சார் உங்க லாஜ் பணத்தை கூட கட்ட சொன்னார்."

நான் ஸ்டேசனை விட்டு நடந்தேன்.

என் பின்னே வந்த சீனிவாசன்
ஒரு ஆட்டோவை நிறுத்தி என்னோடு சிவில் உடையில் ஏறுகிறார்.

ஆட்டோ சிவாஜி நகர் லாஜ்ஜை நோக்கி நகர்கிறது.

நாங்கள் இறங்கியதும் ரூம் பையன்கள் ஓடிவருகிறார்கள்.

"என்ன சார் நடந்துச்சு"

நான் மெளனமாக சார்ஜன் சீனிவாசனை பார்க்கிறேன்.

"தப்பா அரட்ஸ் பண்ணிட்டோம்.
பிறகுதான் தெரியும் ஓஐசீ ஐயாவுக்கு தூரத்து உறவுக்காரர் ஜீவன் என்கிறது.
இனி அவர்தான் சார் பில்லெல்லாம் கட்டுவார்." என்கிறார் சீனிவாசன்

நான் பேசாமல் சீனிவாசன் சொல்லும் பொய்யை மறுதலிக்க முடியாமல் இருக்கிறேன்.

என் ரூமை திறந்து விட்ட ரூம் பையன்கள்
எங்களை கேட்காமலே டீ கொண்டு வந்து கொடுக்ககிறார்கள்.

ஒரு சில ரூபா டிப்ஸை விட
அவங்க கூட நாலு வார்த்தை அன்பா பேசுறதில கிடைச்ச பாசம் அது.

"வாடிப் போயிட்டிங்க சார்.
குளிங்க ஜம்முண்ணு ஆகிடுவீங்க சார்."

என் அனுமதிக்குக் கூட காத்திராமல் வென்னீர் கொண்டு வந்து
வைத்தான் மணி.

"குளிச்சுட்டு தூங்குங்க.
சாயந்தரம் வர்றன்" என்று எழுந்த சீனிவாசன் கொஞ்சம் பணத்தை எடுத்து தந்து விட்டு கிளம்பினார்.

அவர் போவதை வாசலில் நின்று பார்த்துக் கொண்டு நின்றேன்.

பணம் பறிக்கின்ற போலீஸ்காரரை பார்த்திருக்கேன்.
இப்படியும் பார்ப்பது அரிது.
மனதுக்குள் வியக்கிறேன்.

நான் உள்ளே போய் குளித்து விட்டு வரும் போது
மேசையில் யாரோ சாப்பாடு கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.

நான் கதவைத் திறந்த போது ரூம்பாய் குமார் வெளியே நின்றிருந்தான்.

"சார்
எனக்கு கொண்டாந்த சாப்பாடுதான்.
மனசு கேக்கல்ல.
என்னால முடிஞ்சது இதுதான் சார்" என்றான்.

ஒருத்தனது மனசு
கோடியை விட பெறுமதி வாய்ந்தது என்பது
அந்த வார்த்தை சொல்லாமல் புரிய வைத்தது.

நான் சாப்பிடத் தொடங்கியதும்
குமார் என் பக்கத்திலே நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடிந்ததும் என் கையை குமாரே கழுவி விட்டான்.

"உங்க சிரிப்பை திரும்ப பார்க்கணும் சார்
தூங்குங்க................
சாயந்தரம் டீயோட வந்து எழுப்புறேன்" என்று போகும் போது

"கதவை சாத்திட்டு போ குமார்" என்றேன்.

"உள்ளாற சாத்துங்க சார்" என்றான்.

"எனக்கு ஒண்ணும் ஆவாவது
சாத்திட்டு போ" என்று சொல்லி விட்டு
படுக்கையில் சாய்ந்த போது
தலையனை என்னை அறியாமலே நனைவது தெரிந்தது....................

No comments: