Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 8


உங்களை கேஸ் ஏதும் போடாம வெளியில விடுறதுக்கு
நினைச்சிக்கிட்டு இருந்தார்.
இப்ப பாருங்க.............
என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?
யார் அந்த ஆளு?
அந்த ஆளு வந்தா
அவனையும் உள்ள போடணுமுண்ணு கோபத்தில இருக்கார்
என்று சீனிவாசன் வந்து சொன்ன போது
என்னிடம்
இருந்த பலமும் இல்லாமல் போச்சு ...............

இதென்னடா
இதை முன்னமே சொல்லியிருந்தா
நான் மாகாகிட்ட
வக்கீல பார்க்க சொல்லியே இருக்க மாட்டேனே?

அவன் என்ன சொல்லி
வக்கீல் பேசினாரோ
ஒண்ணுமே புரியாம சீனிவாசனை
தலை நிமிர்ந்து பார்த்த போது

"நான் என்னென்னவோ
பேசி வச்சிருந்தேன்.
நீங்க கெடுத்துட்டீங்க" என்றார்

எனக்குள் ஒரு குற்ற உணர்வு.............

"வாங்க..............
கதிர் சார் கூட பேசுங்க"

அவர் முன்னால் நடக்க
நான் அவரைத் தொடர்ந்தேன்.

உள்ள போனதுதான் தாமதம்
"உன்னை பார்க்க யார் வந்தா?
வரட்டும்............"
பொறுப்பதிகாரி கதிர் ஏதேதோ
கத்திக் கொண்டே போனார்.

எனக்கு எதுக்கு இப்போ இப்படி கத்துறார்
என்றே புரியவில்லை.

சார்
எனக்கு தெரிஞ்சது ரேகா மட்டும்தான்.
வந்தது கூட என் பக்கத்து ரூம் பிரெண்டு
அதுதான்.................
என்னை எப்படியும் வெளியில எடுண்ணு
சொன்னேன்.

"அதுக்கு முன்ன ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்"என்றார்

இதென்னடா
ஏதாவதுண்ணா வக்கீல வச்சுதானே
வெளிய எடுப்பாங்க.
சினிமாவுல எல்லாம் அப்பிடித்தானே வருது.
இதென்ன புதுக் கதை
என்று எனக்குள் நினைக்கும் போதே

நான் விட்டிருப்பேன்.
எனக்கு மேல ஒருத்தர் இருக்கார்.
அவர் வேற அவங்க ஊர்காரர்.
அதுதான் .............பிரச்சனை
அதுக்குள்ள நீ.................
என்று பொரிந்து தள்ளினார்.

கத்துறார்..........

நல்ல மனுசன் மாதிரியும் இருக்கார்
ஒண்ணுமா புரியல்ல
தலை கால் புரியமாட்டேன்னு சொல்வது
இதுதானோ என்பது போல இருந்தது எனக்கு

"இப்போ எல்லாமே அவ கையிலதான் இருக்கு
அவ உன்னை தெரியாதுண்ணு சொன்னான்னு வை
உன் கதி அதோ கதிதான்"

அவளால என்னை தெரியாதுண்ணு சொல்ல முடியாது சார்.

"யோவ்
அப்போ இதில என்ன எழுதியிருக்கா?
என்ன எழுதியிருக்கா?
உன்னை தெரியாது
யாரோ ஒருத்தன் பின்னாடி வாரான்ணுதானே?"

நான் பேசாமல் அமைதியானேன்.

"நீ டைகர்ணு வேற எழுதியிருக்கா
உண்மையா?"

சத்தியமா இல்ல சார்

"நீ சிங்கப்பூர்ல இருந்தேண்ணு எப்படி நம்புறது?"

ரேகாவே சிங்கப்பூரில
எங்க அக்கா வீட்டுக்கு வந்திருக்கா சார்.

"இவ்வளவும் செஞ்சிட்டு
இப்போ நடிக்கிறாவா?
தே.........யா
இருந்தாலும் உன்னை இங்க இருக்க விடக் கூடாது.
உன்னை உள்ள போட்டாத்தான் சரி" என்றவர்

சீனிவாசனிடம் கன்னடத்தில் ஏதோ சொல்லி விட்டு
"போ.........போ" என்றார்.

கதிர் சார் அறையை விட்டு வெளியேறி நடந்த
சீனிவாசனை பின் தொடர்ந்து நடந்தேன்.

கீழே இருக்கும் ஏதோ ஒரு இடத்துக்கு
என்னை அழைத்து போவது தெரிந்தது.

அது ஒரு குகை போல இருந்தது.

உள்ளே இறங்கி சற்று போகும் போதே
ஒரு வித மணம்
அது நாற்றம்
எனக்குள் அருவருப்பைத் தந்தது.

நடந்து செல்லும் போது
ரிமாண்ட் செல்களில் சிலர் இருப்பது
கப்பிகளுக்குள்ளால் தெரிந்தது

எனக்கு நடக்கப் போவது தெளிவாக விளங்கியது

சற்று தூரத்தே இருந்த போலீஸ்காரர்
சீனிவாசனைக் கண்டதும்
எழுந்து சல்யூட் அடித்தார்.

அந்த போலீஸ்காரர் இருந்த இடத்தை
நாங்கள் நெருங்கியதும்
செல்லில் இருந்த ஒருவன்
சீனிவாசனை நோக்கி ஏதோ கத்தினான்

சீனிவாசனும் ஏதோ கத்தினார்

அவன் எந்த பயமுமில்லாமல்
சீனிவாசனை நோக்கி கத்திக் கொண்டே இருந்தான்

சீனிவாசனின் முகம் சிவந்திருந்தது

எனக்கு ஒரு மண்ணும் விழங்கவில்லை

அதன் பின்
அந்த போலீஸ்காரரிடம் மட்டும் ஏதோ சொல்லி விட்டு
என்னிடம் கூட பேசாமல் நடந்தார்.


உட்காரு சார்
என்று ஒரு பென்ஞ்சை காட்டினார் அந்த போலீஸ்காரர்.

நான் எதுவுமே பேசாமல் அதில் அமர்ந்தேன்.

"கதிர் சார்
உள்ள போட வேணாம் என்றாராம்" என்றார்.

உள்ளே இருந்த அந்த ஆள் கம்பி அருகே வந்து
என்னை நோக்கி பேசினான்

"என்ன பண்ணிட்டு வந்தே"

ஒண்ணுமில்ல

"அப்போ
இவனுக பைசா பறிக்க பார்க்கிறானுகளா?
ஒரு பைசா குடுக்காத..............." என்று பேசத் தொடங்கியதும்

என் பக்கத்திலிருந்த போலீஸ்காரர் கன்னடத்தில் ஏதோ சொல்ல

"அடடா............நீயா அது
யாரோ டெரரிஸ்ட்டை புடிச்சிட்டாங்கண்ணு சொன்னாங்க
அது நீயா?
நீ என்னமோ பச்சை புள்ள மாதிரி இருக்கே............."

ஒருவனை பார்த்ததும் எடை போடும் அவன் திறன் கண்டு
ஒரு கணம் வியப்பாக இருந்தது.

"பேரு என்னா?"

ஜீவன்

"மேரே ஜீவன் சாத்தி "
என்று பெரிதாக சிரித்தான்.

"பகல் சாப்பிட்டியா?"

இல்ல

"காலையில............"

ஆமா

"பகலைக்கு எனக்கு சாப்பாடு வரும் போது
உனக்கும் வரும்...............
என்ன வேணும் சொல்லு
இவனுக அடி தாங்கிறதுக்கு நல்லா சாப்பிடணும்"
என்று சொல்லி விட்டு
அந்த போலீஸ்காரரிடம் ஏதோ கன்னடத்தில் சொன்னான்.

இல்ல..................என்று நான் இழுக்கும் போதே

"இந்தா நிக்கிறானே இவன்...........வந்தவன்..........பெரியவனுக
எல்லாமே என்கிட்ட பிச்சை எடுக்கிற நாய்கள்
நான் மாசா மாசம் பைசா குடுக்கிறன்
என்னை பார்த்தா என்ன
என் பேரை கேட்டாலே பெங்களூரே அதிரும்
தாதாண்ணா தெரியுமா?
வெளிய போயி அப்பாராவ்ண்ணு கேளு
அப்போ என்னை பத்தி தெரியும்
போலீஸ்காரணுக என்டாலே
நன்றி கெட்ட நாய்கள்
ஏதோ கொலை கேஸுல
யாரையோ புடிக்க முடியாம
என்னையே கொண்ணாந்து போட்டிருக்காணுக................
இவனை எல்லாம் நம்பாத
புரியுதா?................
ஒண்ணு
அணைச்சு கேப்பாணுக
இல்ல
அடிச்சு கேப்பாணுக
உயிரே போற மாதிரி தெரிஞ்சாலும்
இல்லேண்ணா
இல்லேண்ணே சொல்லு
என்னை நம்பு................"

என்ற போது
எனக்குள் உதறல் எடுத்தது...

No comments: