Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 4




என்னை ஏற்றிக் கொண்டு வந்த போலீஸ் ஜீப்
போலீஸ் வளாகத்துக்குள் நுழைந்து நிற்கிறது

இறங்குமாறு சொல்லி
என்னை அழைத்துக் கொண்டு போகிறார் சீனிவாசன்.

இழுத்துக் கொண்டு போக வந்தவர்கள்
அழைத்துக் கொண்டு போவதில் மனசு ஆறுதல் அடைகிறது

இருந்தாலும்
உள்ளே வரவேற்பு எப்படி இருக்குமோ என்று
மனம் நினைத்துப் பார்க்கிறது

யாரையாவது பிடிக்கப் போனவுடனே
இறங்கினதும் யாருக்காவது
எதையாவது சொல்லி சாத்தணும்
அப்பதான் சுத்தி நிக்கிறவன் பயப்படுவான்
இல்லேண்ணா
போலீசுண்ணு பார்க்காம
நம்மள சாத்தினாலும் சாத்திடுவான் என்று
போலீஸ் நண்பர் ஒருவர்
ஒரு முறை சொன்ன பாடம் நினைவுக்கு வருகிறது

உள்ள போனதும்
போலீஸ் பலத்தை காட்டுறதுக்கு
நாலு தட்டாவது நிச்சயம் தட்டுவாங்க
இல்ல
லாடம் கட்டினாலும் கட்டுவாங்க

நாயகனில் கமல் வாங்கும் உதை ஞாபத்துக்கு வந்த போது
இதெல்லாம் தேவையா என்றது மனசு

உதறலாகவே இருந்தது

"பயப்படாதே
கதிர் சார் ரொம்ப மோசமானவர்தான்
இருந்தாலும் ரொம்ப நல்லவர்"

என்றவாறு என் கையை பிடித்துக் கொண்டு
என்னை அழைத்துச் செல்லும் சீனிவாசன் சொன்ன போது
என் உணர்வுகள் சீனிவாசனுக்கு
என் கைகளினூடாக வந்த குளிரும் நடுக்கமும்
சொல்லியிருக்க வேண்டும் என்றே தோன்றியது

உள்ளே போனதுதான் தாமதம்
உட்கார்ந்திருந்த
போலீஸ் அதிகாரி கதிர்
ஏதோ கெட்ட வார்த்தையை பேசிக் கொண்டு எழுந்த போது

"அடிச்சிடாதீங்க சார்
இதை முதல்ல பாருங்க" என்று
என்னிடம் இருந்த போட்டோ அல்பத்தை எடுத்து
கதிர் கையில் கொடுத்தார் சீனிவாசன்.

அல்பத்தை புரட்டிப் பார்ப்பதும்
என்னை முறைத்துப் பார்ப்பதுமாய்
சற்று நேரம் கோபமாக இருந்தார் கதிர்.

உட்கார் என்றார்

உட்காரப் போனேன்

இல்ல நில்லு

இன்னும் அந்த கோபம் குறையவே இல்லை.

போலீஸ் அதிகாரி கதிர்
கன்னடத்தில் எதையோ சொல்ல
என்னை வெளியே அழைத்து வந்த சீனிவாசன்
வெளியே இருந்த ஒரு அமர்வில் இருக்க வைத்து விட்டு

"ஓட நினைக்காதே
அப்புறம் அதுதான் இறுதியாக இருக்கும்
குடிக்க ஏதாவது வேணுமா?"

நான் பதில் கொடுக்காமல் இருந்தேன்.

ஒரு போலீஸ்காரரை அழைத்து
எனக்கு குடிக்க தண்ணி கொடுக்கும்படி சொல்லி விட்டு
என்னை பார்த்துக் கொள்ளும்படி வேறு
அந்த போலீஸ்காரரிடம் கண்ணைக் காட்டிவிட்டு
சீனிவாசன் போலீஸ் அதிகாரி கதிர் அறைக்குள் போனார்.

தண்ணியை தந்த போலீஸ்காரன்
"அந்தப் பொண்ணை ரொம்ப நாளா தெரியுமா?
சினிமா நடிகை மாதிரி இருக்கா...............
................................................................."
என்று அவன் பேசிய வார்த்தைகள்
அவன் எப்படிப்பட்டவன் என்பதை காட்டியது

என்னுள் வந்த கோபத்தை காட்டிக் கொள்ளாமல்
தலையை தொங்கப் போட்டுக் கொண்டேன்.

"கிடைச்சா அனுபவிச்சுடனும்யா
காதல் கீதல்ண்ணு பின்னால திரியக் கூடாது
இப்ப பாரு
உன்னை லாடம் கட்டப் போறங்க" என்று
மீண்டும் கிலியை மனதில் கொண்டு வந்தான்.

அவன் என்னை வெறுப்பேத்திக் கொண்டிருக்கும் போது
சீனிவாசன் என்னை அழைத்தார்.

நான் உள்ளே போனதும்
போலீஸ் அதிகாரி கதிர்

இந்த பொண்ணு யாரு?

அவ என் லவ்வர்.
4 வருசமா பழக்கம்.
மெற்றாசுல பாரீஸ் கார்னர்ல வேலை செஞ்சா
அப்போதிலயிருந்து தெரியும்........என்றேன்.

அவங்க அம்மா என்னவோ
ஒருத்தன் அவ பின்னாலயே திரியிறான்
வேலைக்கு கூட போக விடுறான் இல்ல
ரோட்டில வேற அவளுக்கு அடிக்க போயிருக்கான்
அது வேற நீ விடுதலைப்புலி
உன் அறை முழுக்க வெடி குண்டு இருக்கு
அதை வச்சு மிரட்டுறே
அப்படின்ணூ புகார் செஞ்சிருக்காங்களே?

இல்ல சார்
அவங்க பொய் சொல்றாங்க
அவங்க குடும்பத்துல எல்லாரையும் எனக்குத் தெரியும்.
அவங்க தங்கச்சியை கூட
என் தூரத்து உறவு பையன் ஒருத்தனுக்குத்தான்
கல்யாணம் பண்ணிக் கொடுக்க உதவி செஞ்சேன்.
அப்போ எடுத்த படங்கள்தான்
உங்க கையில இருக்கிறது
அதில அவங்க குடும்பத்தோட நான் இருக்கேன்

அப்போ விடுதலைப் புலி என்கிறது?

எனக்கு இதெல்லாம் தெரியாது சார்.

இதெல்லாம் என்ன?

அவர் மேசை டிராயருக்குள் வைத்திருந்து
என் பெயரில் இருந்த 3 கடவுச் சீட்டுகளையும்
இலங்கை அடையாள அட்டையையும் மேசையில் வைக்கிறார்.

இதயம் நின்று துடிக்கிறது.

பாதுகாப்புக்காக ரேகாவிடம் கொடுத்து வைத்திருந்த அவை
அவர் கையில் இருப்தை கண்டதும் அதிர்கிறேன்.

அலட்டிக் கொள்ளாமல்
பார்க்கலாமா சார்? என்கிறேன்.

ஒன்று எனக்குரிய கடவுச் சீட்டு.
அடுத்த இரண்டு வேறு வேறு பெயர்களில்
இருந்த நாட்டு கடவுச் சீட்டுகள்.

என் உண்மையான கடவுச் சீட்டு காலாவதியாகி பல காலம் ஆகியிருந்து.
அதற்குப் பின் நான் பாவித்தது
நான் இருந்த நாட்டு கடவுச் சீட்டு.
இன்னோன்று ரேகாவால் எடுக்கப்பட்டது.

அது காலாவதியாகிடுச்சு சார்
அடுத்ததுதான் எனது

இது?

3வது குறித்து எனக்குத் தெரியாது சார்

அதில இருக்கது உன் போட்டோதானே?

ஆமா

அப்போ.........இது உனக்கு தெரியாம முளைச்சுதா?

இல்ல சார்
சிங்கப்பூர் போறதுக்கு டிக்கட் மெற்றாஸ்லதான் வாங்குவேன்.
இவ டிராவல்ல மனேஜரா இருந்தா
ஒருமுறை டிக்கட் எடுக்கிறதுக்கு ரேகாவுக்கு
என் பாஸ்போட்டை கொடுத்து
டிராவல்ல தொலைஞ்சுட்டுதுண்ணு சொன்னாங்க.
அது இல்லெண்ணா என்ன
வேற ஒண்ணு எடுத்துத் தாரோமுண்ணு
கையெழுத்தும் போட்டோவும் வாங்கினாங்க
அது இதுவா இருக்கலாம்
ஆனா என் ஒரிஜினல் பாஸ்போட் கிடைச்சுது
அதனால இது பத்தி அவ சொல்லவே இல்ல
இப்போதான் இதை முதல் முறையா பார்க்கிறேன்

அவர் என் முகத்தை பார்த்தார்.

நான் அப்பாவி போல நின்றிருந்தேன்.

யாரையும் நம்பக் கூடாது
அவங்க அம்மா உன்னை யாரோ என்கிறாங்க
ஆனா
உன் பாஸ்போட் எல்லாம் அவங்க வீட்டில இருந்து
கொண்டு வந்து தாராங்க

அவர்கள் செய்த ஒரே ஒரு முட்டாள்தனத்தால்
என் பொய்யை அவர் நம்பினார்

என் பாதி பொருட்கள் கூட
அவங்க வீட்டிலதான் சார் இருக்கு

அப்போ கிறீன்லாண்ட்டில்?

மாத வாடகைக்கு
கிறீன்லாண்ட்டிலதான் தொடந்து தங்கியிருக்கேன்.
அது கூட ரேகா எடுத்து தந்ததுதான்
அதுக்கு கூட ரேகாதான் காசு கட்டுறா?

ஏன்
உன் கிட்ட பணமில்லையா?
அவவ மிரட்டடித்தான் பணம் பறிப்பியோ?


இல்ல சார்
நான் வச்சுக்கிறதில்ல.
அவதான் என் செலவுகளை பார்ப்பா...........
எனக்கு வீட்டில இருந்து பணம் வரும்.
அதை அவளுக்குத்தான் கொடுப்பேன்.

எந்த பாங்குக்கு பணம் வரும்?

கனரா பாங்க்.

அதை எடுத்துக் கொடுப்பியா?

இல்ல. செக் மூலம்......................

குனிந்து தலையை சொறிகிறார்.

அவங்க ரொம்ப பிராடு சார்
இவர் காசையெல்லாம் சாப்பிட்டிருங்க போல தெரியுது
என்று சீனிவாசன் எனக்காக கதிரிடம் பேசுகிறார்.

தொடர்கிறார்
இவர் அறையில யோகா படங்கள்தான் இருந்துச்சு.
அதுக்கப்புறம் அந்த தே........... படம்.

ஐயோ...........அவ அப்படி கிடையாது
என்று மனசு சொல்ல துடிக்குது
சார்..........................என்று இழுக்கும் போதே

உனக்கு வேற பொம்பளையே கிடைக்கல்லயா?

அவ அப்படி இல்ல சார்.
வேற யாரோ....................

உங்கள எல்லாம் செருப்பால அடிக்கணும்
வேற யாரோ இல்ல
அவங்க அம்மாதான் கம்பிளைன்ட் கொடுத்தது.
அவளும் வந்து இருந்தா
ஆனா அவ வெளிய இருந்தா...............

அதிலிருந்தே நடந்ததை சற்று ஊகிக்க முடிகிறது.

உன் பாங்க் புக்கை பார்க்கணும்.

அது கிறீன்லாண்ட்டில் இருக்கு சார்.

நாளைக்கு காலையிலயே
கிறீன்லாண்ட்டுக்கு சீனிவாசன் சாரோடு போய்
அதெல்லாம் எடுத்து வா

உனக்கு இங்க யாரையும் தெரியாது
உள்ள அடிச்சு கொன்னு போட்டாக் கூட
யாருக்கும் தெரியாது

உண்மை தெரியிற வரைக்கும்
சீனிவாசன் சொல்லுற அறையில இரு.
ஓட நினைச்சே...................

நான் பேசாமல் சீனிவாசனுடன் போனேன்.

கதிர் சார் ரொம்ப மோசமானவர்
முதல் முறையா நான் பார்த்து
அவர் கை வைக்கல்லேண்ணா
அது உனக்குத்தான்
ஆனா கதிர் சாருக்கு மேல இருக்கவர்
குடகு நாட்டுக்காரர்.
அவர் அவங்க பக்கம் எடுத்தா............
நாளைக்கு வரையும் இரு பார்க்கலாம்

சார்
அவ என் பணத்துக்கு ஆசைப்படுறவ இல்ல சார்.

இருந்தாலும்
அப்பிடி ஒரு கேஸ் போட்டு
உள்ளே வச்சு...............................

என் உடல் நடுங்கியது

உன்னை இவ்வளவு செஞ்சிட்டாங்க
இன்னுமும் பரிதாபப்படுறீயே
இங்க இரு
குளிரும் என்று ஒரு போர்வையை தந்து விட்டு
அறையை சாத்தினார் சீனிவாசன்.

கதவை சாத்தி விட்டு
வெளியே போலீசாரோடு என்னைப் பற்றி
ஏதோ சொல்லி விட்டுப் போக
அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள்
சிரித்தார்கள்
எனக்கு ஒன்றுமே புரியவில்லை..............

No comments: