Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 10


அப்பாராவ்
நடக்க முடியாமல் நடந்து வந்தான்
இல்லை
அந்த இருவரும் தள்ளிக் கொண்டு வந்தார்கள்

நானும் வருவதை எதிர் கொள்ளத் தயாரானேன்.

நான் ரெடி....................

அப்பராவை கொண்டு வந்து விட்டு விட்டு
அடுத்து என்னைத்தான் இழுத்துக் கொண்டு
போகப் போகிறார்கள்.

நான் பென்சில் உட்கார்ந்து நடப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் மன நிலை
இப்போது கடுமையாகிக் கொண்டு வந்தது.

அவர்கள் என்னை நெருங்கும் போதே
அப்பாராவின் முனங்கல் வந்ததே தவிர
அவனது பேச்சு வரவில்லை

என் பக்கத்தில் இருந்த
போலீஸ்காரன் எழுந்து
செல்லைத் திறந்து விட்டான்

அவர்கள் அப்பாராவை
செல் உள்ளே தள்ளி விட்டு
என்னை பார்த்தார்கள்.

"உனக்கும் நாளைக்கு இதுதான்
ஏதோ படிச்சவனா இருக்கிறே?
அதனால தப்பிட்டே.........."
தடியன் போல் இருந்த ஒரு போலீஸ்காரன் சொன்னான்.

நான் ஒன்றும் பேசவில்லை
அமைதியாக அவனை பார்த்து விட்டு
கீழே பார்த்துக் கொண்டேன்.

என் பக்கத்தில் இருந்த
போலீஸ்காரனிடம் எதையோ
நீண்ட நேரம்
பேசி விட்டு அவர்கள் நடந்தார்கள்.

பக்கத்தில் இருந்த போலீஸ்காரன்
"குடிக்க ஏதாவது தேவைண்ணா கேளுங்க சார்" என்றான்.

ஊகும்..................
வேண்டாம் என்று தலையாட்டினேன்.

"உங்க தகுதிக்கு இதெல்லாம் தேவையில்ல சார்?"

அவனிடம் இருந்து வந்த மரியாதையான வார்த்தை புதிராய் தெரிந்தது.

அப்பாராவ் மெதுவாக செல் கம்பி ஓரத்துக்கு வந்து
"நான் படிக்காதவன் சார்
நீ ..............................
சே................உனக்கெல்லாம் இது தேவையா சார்?"
என்றான்.

அப்பாராவ்
உன் கிட்ட என்ன பேசண்ணே தெரியல்ல?
எனக்கு வலிச்சுது................. என்றேன்.

"அட போ சார்
இது மாதிரி அப்பன்ட அடி எல்லாம் வாங்கியிருக்கேன்.
இது என்ன................."என்று அவன் சொன்ன போது
அவனை விட எனக்கே வலித்தது.

நான் அவனை கேள்விக் குறியாக பார்த்தேன்.

"நாளைக்கு என்னை பிரிசினுக்கு கொண்டு போகப் போறாங்க
அதுக்கு முன்னாடி லாடம் கட்டி
எதை எல்லாமோ ஒத்துக்க வைக்க பார்க்கிறாங்க...........
அதுதான் வேற ஒண்ணுமில்ல"

நான் அவன் முகத்தை வியப்போடு
பார்ப்பதற்காக முகத்தை உயர்த்திய போது

"நீ என்ன இன்ஜினியரா சார்?"
என் அருகே இருந்த போலீஸ்காரன் குறுக்கிட்டான்.

என்னை அது அதிரவே வைத்தது.

நான் என்னைப் பற்றி யாரிடமும் சொல்லவேயில்லை.
இது எப்படி இவனுக்கு தெரிந்தது
புருவத்தை உயர்த்தி
யார் சொன்னது? என்றேன்.

"போலீஸ் உன் ரூமை செக் பண்ணினப்போ
உன் சர்ட்டிபிக்கேட் எல்லாம் கிடைச்சிருக்கு
நீ சிங்கப்பூரில இன்ஜினியரா இருந்திருக்கே
டீவில இருந்திருக்கே......................
நாளைக்கு
சிங்கப்பூருக்கு போண் போட்டு விசாரிக்க போறாங்க..................
வந்தவங்க சொன்னாங்க" என்று
அவன் தொடர்ந்து பேசிக் கொண்டு போன போது
யாரிடம் என்ன கேட்கப் போறாங்களோ?
அவங்க என்ன சொல்லப் போறாங்களோ?
என்று மனசு பதறத் தொடங்கியது

"ME பண்ணியிருக்கியாமே சார்?"
என்று போலீஸ்காரன் கேட்ட போது
அவன் பேச்சில முன்னை விட மரியாதை தெரிந்தது.

ஆமா என்று
தலையை ஆட்டி பெருமூச்சு விட்டேனே தவிர
பேச வரவில்லை.

"சினிமாண்ணே?"

அது ஆசையில மனசுக்குள்ள வந்தது.
அதில ஒரு பைசா கூட சம்பாதிக்கல்ல
விருப்பம்......................
அவ்வளவுதான்


வீட்டில அத்தனை பேரின்
ஆசைக்கு இன்ஜினியர் ஆனாலும்
எதிர்ப்புக்கு
மத்தியிலும் வலிந்து பகுதி நேரமா
சினிமா நாடகம் என்று கற்றுக் கொண்டதாலோ என்னவோ
உடல் முழுதும் பரவியிருந்தது
கலை மோகம்தான்

யுனிவசிட்டியில இருக்கும் போது
உலகத்தை மாத்தணும் என்கிற வெறி
காலமாக்ஸ் : எங்கெல்ஸ் : லெனின் : சேகுவேரா
இவங்களை படிக்கிற வெறி
அதை படிச்சிட்டு
அவங்க மாதிரி புரட்சி பண்ணனும்
என்கிற தோழமையுடன் இருந்த நண்பர்களின் நட்பு

இதெல்லாம் செய்யணுமுண்ணா
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தணும் எனும்
லெச்சரர்களின் அறிவுரைகள்

பிரச்சனைகள் உள்ள இடங்களில
வீதி வீதியா போட்ட
வீதி நாடகங்கள் : தெருக் கூத்துகள்
அதற்கான பட்டறை பயிற்சிகள்
பல்கலைக் கழக போராட்டங்கள்
அதை நிறுத்த வரும்
போலீசாரோடு அடிதடி போராட்டங்கள்

அநியாயம் நடக்கும் தொழிலாளர்களை
சந்தித்து விழிப்புணர்வு வகுப்புகள்
அவர்களது உரிமைகளை வென்றெடுக்க
அவர்களை ஊக்கப்படுத்திய பங்களிப்புகள்

மாணவர் போராட்டங்கள்
விழிப்புணர்வு குறித்து பத்திரிகை : சஞ்சிகைகள்
எல்லாமே கமியூனிச சித்தாந்தங்கள் வழி
எமக்குள் ரத்தத்தோடு
சிகப்பு நிறமாக மட்டுமல்ல சிகப்பு சிந்தனைகளும்
செந்நிறமாய் உட் புகுந்தன

பாட்டாளி மக்கள் குறித்த சிந்தனை
சமதர்ம நோக்குகள்
அரசியல் மாற்றங்கள்
ஜாதி ஒழிப்புகள்
மூட நம்பிக்கை தகர்ப்புகள்
அனைத்தும் மாணவர் கையில் என்ற நம்பிக்கை
வேகம்............
பயமறியா வேகம்

இவை அனைத்தும்
பல்கலைக் கழகங்களில் இருந்த போது
நம்மை அறியாமல் நமக்குள் உள் வாங்கின

உலகத்தை மாத்தணுமுண்ணு
போராடிய அனைவரும்
BE முடிச்சு வெளியே வந்த போது
அனைவருக்கும் வேலையில்லா பிரச்சினை!

கால்மாக்ஸ் வரல்ல
லெனின் வரல்ல
எங்கெல்ஸ் வரல்ல
சேகுவேரா வரல்ல

அனைத்து நண்பர்களுக்குள்ளும்
பிரச்சனைகள் தலை தூக்கிச்சு

எதையாவது செய்ய
மந்திரிகளின் சிபார்சு மடல்களுக்காக
மந்தி(குரங்கு)கள் போல
அவங்க மதில்களில் நண்பர்கள்
காவல் காத்து தவம் இருந்தப்போ
ரொம்ப பேர் பல்கலைக் கழகத்தில்
செய்த போராட்டங்களை மறந்தே போனாங்க

பலர்
தன் பெற்றோரை வாழ வைக்க
ஏதாவது செய்யணும் எனும் நிலைக்கு தள்ளப்பட்ட போது
ஆட்சிக்கு வரும்
ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு
வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாங்க

பல இளைஞர்கள்
புரட்சிவாதிகள் எனும் பெயர்
இல்லாமல் போய்
பயங்கரவாதிகளாக்கப்பட்டு கொல்லப்பட்டாங்க

இங்கு
லெனினோ - மாக்ஸோ
வேலை வாங்கிக் கொடுக்க
உயிரோடு இல்லை.
அந்த பணக்கார வர்க்கத்து அரசியல்வாதிகளால்
மட்டுமே அது முடிஞ்சுது................

தொடர்ந்து பலரால் படிக்க மனமிருந்தும்
குடும்பம் அவர்கள் முன்
வறுமையோடு இருப்பதை காணும் போது
இது போதும்டா
ஒரு வேலை எடுத்துட்டு
அப்புறமா படிக்கிறேன் என்று போனவன்களில
பலர் கம்யூனிச தத்துவங்களை
மறந்து லஞ்ச ஊழல் கூட செய்தாங்க

அதை செய்யிறதுக்கு
நல்லா பேசக் கூடிய பயிற்சி மட்டும்
கார்ல்மாக்ஸ்:லெனின்: எங்கெல்ஸ் :மாவோ:டால்ஸ்டாய்
போன்ற புத்தகங்கள் வழி பலருக்கு கிடைச்சிருந்துச்சு

நான் தொடர்ந்து படிக்க தொடங்கிய போது
முன்னைய போராட்ட நண்பர்களில்
அநேகர் பல்கலைக் கழகத்தை விட்டு
வெளியேறி விட்டனர்.

இருந்த சிலரிடம்
முன்னைய வீரமும்: விவேகமும் குறைந்தே போயிற்று
புதியவர்களுடன்
முன்னைய தோழர்கள் போல
எதையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை

வெளியேறிய
நண்பர்களின் மாற்றம்
விடுபடல்
தூரம் எல்லாமே
மிஞ்சி இருந்த எமக்குள்ளும்
தளர்வை ஏற்படுத்தி இருந்தது

ME கற்கும் போதே
முன்னைய போர் குண திறன்கள்
அனைத்தும்
கலைக்குள் விதையானது......................

நான் அந்த பொன்னான
காலத்தை எல்லாம் இழந்தவன் போல
விறைத்துப் போய் நின்ற போது

"என்ன சார்
கல்லாயிட்டே?"
என்ற அப்பாராவின் குரல் என்னை
அவன் பிடித்துக் கொண்டிருந்த
சிறைக் கம்பியை எட்டிப் பார்க்க வைத்தது...

No comments: